Published : 12 Jul 2021 10:17 AM
Last Updated : 12 Jul 2021 10:17 AM
வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என கடந்த ஜன. 11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து, சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பின், கடந்த ஏப். மாதத்தில் தமிழகத்தில் கரோனா உச்சத்தில் இருந்ததால், அவரால் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடியவில்லை.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 12) அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக செய்தி வெளியானது.
அதன்படி, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தன் இல்லத்திலிருந்து அவர் நிர்வாகிகளை சந்திக்கப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "அரசியலுக்கு வரப்போவதில்லை, வர முடியவில்லை என சொன்ன பிறகு, மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. 'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிய காலதாமதமானது. படப்பிடிப்பை முடித்த பின், தேர்தல், பிறகு கரோனா வந்துவிட்டது.
மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு, இப்போது வந்திருக்கிறேன். மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்ற கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்துவிட்டு அது குறித்து தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT