Last Updated : 12 Jul, 2021 03:13 AM

 

Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM

3 மாத அனுமதி ஜூலை 31-ல் முடிவடைகிறது; ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடருமா?- உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்கும் வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி ஜூலை 31-ல் முடிவடைகிறது. ஆக்சிஜன் தொடர்ந்து தயாரிக்க வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் மே 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிதற்போதுவரை நடந்து வருகிறது. வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.11 கோடியில் பாட்டிலிங் பிளான்டை அமைத்துள்ளது.

தினமும் சராசரியாக 30 முதல் 35 டன் திரவ நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அதே அளவு விநியோகிக்கப்படுகிறது. வாயு நிலையிலான ஆக்சிஜன் தினசரி 260 டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டாலும், தினமும் 1 டன், 2 டன் என்ற அளவுக்கு தான் சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யப்படுகிறது.

நேற்று வரை சுமார் 1,800 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 1,700 டன் அளவுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வாயு நிலையிலான ஆக்சிஜன் இதுவரை சுமார் 15,000 டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு, சுமார் 11 டன் அளவுக்கு சிலிண்டர் அடைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை கொண்டே நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதால், இங்கு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடர்ந்து அதே அளவுக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 3-வது அலை தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாதங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

திரவ ஆக்சிஜனை நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்க இயலாது. குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே கொள்கலன்களில் சேமித்து வைக்க முடியும். எனவே, கரோனா தொற்று முழுமையாக முடிவுக்கு வரும் வரை தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்ந்து நடைபெற வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். அதேநேரம், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து இயங்கஅனுமதி தரக்கூடாது என எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி இம்மாதத்தோடு முடிவுக்கு வருமா அல்லது மேலும் சில மாதங்கள் தொடருமா என்பது மத்திய அரசின் நிலைப்பாடு அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை பொறுத்தே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x