Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் முதுகெலும்பு மறுவாழ்வு மையத்துக்கு அரசு சான்றிதழ்கள்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

தி.மலை பழைய அரசு மருத்துவமனையில் முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவதற்கு தேவையான அரசு அனுமதி சான்றிதழ்களை தொண்டு நிறுவன நிர்வாகி பிரீத்தி சீனிவாசனிடம் வழங்கிய பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு. அருகில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ‘ஒருங் கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம்’ செயல்படுவதற்கான அரசு சான்றிதழ்களை தொண்டு நிறுவனத்திடம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.

திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை மணக்குள விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் பிரீத்தி சீனிவாசன். நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையான இவர், தனது 18-வது வயதில் விபத்தில் சிக்கினார். அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. தன்னால் நடக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டபோதும், மனம் தளராமல் ‘SOUL FREE’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன்மூலம் தன்னை போல் முதுகு தண்டுவடம் பாதிக் கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது தொண்டு நிறு வனத்துடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பகுதி கட்டிடத்தில், ‘‘ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் மற்றும் குறுகிய காலம் தங்கும் மையம்” ஆகியவை தொடங்க கடந்த 03-12-19-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியனிடம், மறுவாழ்வு மையத்தின் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றதும், அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான அரசு அனுமதி மற்றும் சான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரீத்தி சீனிவாசன் மனு அளித்து வலியுறுத் தினார். மேலும் அவர், இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த 8-ம் தேதி மனு அளித்து கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, துரித நடவடிக்கை எடுத்து, அனைத்து சான்றிதழ்களையும் விரைவாக வழங்குமாறு துறை அதி காரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல் படுவதற்கு தேவையான சான்றிதழ் தயாரானது.

இதைத்தொடர்ந்து, தி.மலையில் உள்ள பிரீத்தி சீனிவாசன் இல்லத்துக்கு நேற்று சென்று, அவரிடம் “திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவதற்கு தேவையான வருவாய்த் துறையின் கட்டிட உரிமம் சான்றிதழ், பொதுப் பணித் துறையின் கட்டிட நிலைத்தன்மை சான்றிதழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தடையின்மை சான்றிதழ்களை” பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அப்போது, ஆட்சியர் பா.முருகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x