Published : 11 Jul 2021 01:47 PM
Last Updated : 11 Jul 2021 01:47 PM
தேர்தலில் வென்று ஐம்பது நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பதவியேற்பும், அதைத்தொடர்ந்து இருவாரங்களுக்குப் பிறகு ஆளுநரை இருமுறை சந்தித்து பட்டியலை ரங்கசாமி அளித்தார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்கள் பங்கீட்டில் இழுபறி, பாஜக பரிந்துரை செய்த பட்டியலில் மாற்றம், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்வில் தாமதம் ஆகியவற்றால் அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி ஏற்பட்டது.
ரங்கசாமி முதல்வராக மே 7-ம் தேதி பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, 50 நாட்களாகியும் அமைச்சரவை அமையாமல் இருந்தது. இறுதியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் லட்சுமிநாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
முதலில் பாஜக தரப்பில் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பொறுப்பு கேட்கப்பட்டது. ஆனால், முதல்வர் ரங்கசாமி மறுத்து விட்டார். அதனால், முக்கியத்துறைகளை பாஜக தரப்பு கேட்டது. குறிப்பாக, உள்துறையை தரக்கோரியது.
அதேபோல், பாஜக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அமைச்சர்கள் ஒதுக்கீட்டை தொடர்ந்து, இலாகா ஒதுக்கீட்டிலும் முதல்வர் ரங்கசாமி தாமதமாக செயல்படுவதாக பாஜக மேலிடத்தில் அதிருப்தி ஏற்பட்டது.
அமைச்சர்களுக்கு வேலை தரக்கோரி ஆர்ப்பாட்டமும், வேலையில்லாத அமைச்சர்கள் என எம்.பி. வைத்திலிங்கம் சாடும் சூழலும் ஏற்பட்டது. எனினும், தொடர்ந்து அமைச்சர்கள் சட்டப்பேரவை வந்து தங்கள் அறைகளில் அமர்ந்து செல்வது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 11) காலை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகைக்கு வந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து அமைச்சர்கள் இலாகா பட்டியலை அளித்தார். அதைத்தொடர்ந்து, வழக்கம் போல் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.
அவர் நேரடியாக சட்டப்பேரவை சென்று அமைச்சர்களுக்கான பட்டியலை மீண்டும் நகலெடுத்து ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் முதல்வர் ரங்கசாமி சென்றார். அங்கு காத்திருந்த ஆளுநர் தமிழிசையிடம் பட்டியலை தந்தார்.
ஆளுநர் மாளிகை தரப்பில் கூறுகையில், "ஆளுநரிடம் அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை முதல்வர் அளித்தார்" என்று உறுதிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT