Published : 15 Feb 2016 02:23 PM
Last Updated : 15 Feb 2016 02:23 PM
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அரசு பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2-வில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தினமும் மாலையில் 3 மணி நேரம் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதோடு, அம்மா உணவகத்தில் இருந்து தினமும் சிற்றுண்டியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த விருதுநகர், கடந்த 1986-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதில் இருந்து 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து 25 ஆண்டுகள் மாநில தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று வந்தது.
ஆனால் 2011-12-ம் ஆண்டில் 93.53 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநில அளவில் 3-ம் இடத்துக்கும், 2012-13-ல் 94.93 சதவீதம் தேர்ச்சிபெற்று 5-ம் இடத்துக்கும், 2013-14-ல் 96.55 சதவீத தேர்ச்சியுடன் 4-ம் இடத்துக்கும், கடந்த ஆண்டு 97.62 சதவீதம் தேர்ச்சிபெற்று, மாநில தரவரிசைப் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும் பெற்றது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 333 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு அரசு தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ் 2 அரசு தேர்வில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடம் பெற்றுவந்த விருதுநகர் மாவட்டம், கடந்த 2013-14-ம் ஆண்டில், மாநில அளவில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும், கடந்த ஆண்டு, மீண்டும் மாநில அளவில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 199 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களை கண்டறிந்து தேர்வில் அவர்கள் எளிதாக தேர்ச்சி மதிப்பெண் பெறுவதற்கான கையேடுகள், குறுந்தகடுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, பள்ளி முடிந்து மாலையில் சுமார் 3 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டம், திருத்தங் கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் 139 மாணவர்களும், பிளஸ்-2 வகுப் பில் 95 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இவர்களில் மெல்லக் கற்கும் மாணவர்கள் 10ம் வகுப்பில் 40 பேரும், பிளஸ்-2ல் 40 பேரும் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பள்ளி முடிந்ததும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு பாடம் என இரு ஆசிரியர்கள் மூலம், தினந்தோறும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, இச்சிறப்பு பயிற்சி பெறும் மாணவர்கள் 80 பேருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தினமும் அம்மா உணவகம் மூலம் சுண்டல், மொச்சை, தட்டாம்பயிறு, பாசிப்பயிறு என தினம் ஒரு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தலைவரும், திருத்தங்கல் நகர்மன்ற துணைத் தலைவருமான சக்திவேல் இதற்கான ஏற்பாட்டினைச் செய்துள்ளார்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஆர். டேவிட் கூறியதாவது: மெல்லக் கற்கும் மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெறச் செய்வதே எங்கள் நோக்கம். கடந்த ஆண்டில் இப்பள்ளி 10ம் வகுப்பில் 63 சதவீதமும், பிளஸ்-2-ல் 75 சதவீதமும் தேர்ச்சிபெற்றது. தற்போது அளிக்கப்படும் சிறப்பு பயிற்சியால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு ஒத்துழைப்புடன் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகி தேர்ச்சியை எட்டுவோம் என்றார்.
திருத்தங்கல் அரசு பள்ளி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளிலும் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இதுபோன்று சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT