Published : 26 Feb 2016 08:41 AM
Last Updated : 26 Feb 2016 08:41 AM
*
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அருகே வாகனங்களை ரயில் மூலம் ஏற்றிச் செல்ல சரக்கு முனையம் (rail auto hub) அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாகனங்களின் உற்பத்தி பெருகி ஏற்றுமதி அதிகரிக்கும்; போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு நேற்று தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட் டார். குறிப்பாக, நாட்டிலேயே முதல் முறையாக சென்னை அருகே வாகனங்களை ரயில் மூலம் ஏற்றுச் செல்லும் வகையில் சரக்கு முனையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது 2 சதவீதம் அளவிலேயே கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதை 15 சதவீதமாக உயர்த்த இதுபோன்ற திட்டங்கள் உதவும் என்றார்.
வாகன உற்பத்தித் துறையில் ஆசியாவின் தலைநகராக சென்னை விளங்குகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகன உற்பத்திக்கான உதிரி பாகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. சிங்கபெருமாள்கோயில், வாலாஜாபாத், பெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் போர்டு, பிஎம்டபிள்யு, ஹுண்டாய், ரெனால்ட் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் வாகனங்களை உற்பத்தி செய்கின்றன.
சென்னையில் ஒரு நிமிடத்துக்கு 3 கார்களும், 75 விநாடிகளுக்கு ஒரு சரக்கு வாகனமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பெரிய கன்டெய்னர்கள் மூலம் வெளியூர் அல்லது சென்னை துறைமுகத்துக்கு ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால் ஏற்படும் காலதாமதம், துறைமுகத்தில் சில நேரங்களில் ஏற்படும் இடப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பெரிய வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்நிலையில், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் ஆட்டோ ஹப் மூலம் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே சரக்கு முனையத்தை அமைத்து கார் மற்றும் இதர வாகனங்களை ஏற்றிச் செல்ல வழிவகை செய்யப்படும். குறிப்பாக காஞ்சிபுரம் வாலாஜாபாத், செங்கல்பட்டு வண்டலூர் ரயில் பாதைகளுக்கு அருகே வாகனங்களை ஏற்றிச் செல்லும் வகையில் முனையம் அமைக்கப்படும். பின்னர், சரக்கு ரயில்கள் மூலம் வாகனங்களை சென்னை துறைமுகத்துக்கு 2 மணி நேரத்தில் கொண்டு செல்ல முடியும். உற்பத்தியாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களை ரயில் மூலம் ஏற்றிச் செல்வதற்கான சரக்கு முனையம் கட்ட முதல்கட்டமாக ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் அடையாளம் காணப்பட்டு, முனையம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ஒரு ரயில் மூலம் சுமார் 300 கார்களை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். ரயில்வே துறைக்கும் வருமானம் அதிகரிக்கும்’’ என்றனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் 60 முதல் 70 சதவீதம் வரையில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது இது 30 சதவீதமாக குறைந்துவிட்டது. மாறாக லாரிகள், கன்டெய்னர்கள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வது அதிகரித்துவிட்டது. இதனால், சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. ரயில்வே துறை அறிவித்துள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
இனி ஏற்றுமதிக்காக துறைமுகத் தில் வாகனங்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படாது. திட்டமிட்டபடி ரயில்கள் மூலம் வாகனங்களை கொண்டு சென்று கப்பல்கள் மூலம் எளிமையாக ஏற்றுமதி செய்ய முடியும். ஏற்றுமதி அதிகரிப்பதால், உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்கும்போது, வேலைவாய்ப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT