Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தொழில் செய்ய கடன் வேண்டும் என்றும் மனு அளித்த இரண்டு நாட்களில் பெண் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.
கடந்த ஜூலை 9-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த ரமணி என்பவர் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், ஏற்கெனவே தையல் தொழில் செய்து வருவதாகவும், வருமானம் போதாததால், தொழிலை மேம்படுத்த கடனுதவி அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகளில் ‘தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் ஆகியோருக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது. மனு அளித்த ரமணிக்கு இந்த திட்டத்தில் கடனுதவி அளிக்க மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஏற்கெனவே மேற்கொண்டு வரும் தையல் தொழிலை மேம்படுத்த ரூ.50 ஆயிரத்துக்கான கடனுதவி வழங்கப்பட்டது. அந்த கடனுதவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சீனுவாச ராவ், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT