Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
புதுச்சேரி அரசில் சபாநாயகராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்த சந்திரகாசுவின் மகளான சந்திரபிரியங்கா, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தற்போது நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், அமைச்சராகியுள்ளார். புதுச்சேரி அரசால் காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ள நிலையில், காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்கு சந்திரபிரியங்கா எந்த வகை முன்னெடுப்புகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக் குழு பொதுச் செயலாளர் ஏ.எஸ்.டி.அன்சாரி பாபு கூறியது: மருத்துவ வசதி, அடிப்படை கட்டமைப்புகள், புதிய வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பாக புதுச்சேரியில் அமையும் எந்த அரசும் காரைக்கால் மீது உரிய கவனம் செலுத்துவதில்லை என்ற வருத்தம் காரைக்கால் மக்களிடையே நீடிக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
பட்ஜெட்டில் காரைக்கால் பிராந்திய மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், திருமலைராயன்பட்டினம் மின் திறல் குழும வருமானம், வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுக ஈவுத் தொகை போன்றவற்றை காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறித்து அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அமைச்சர் சந்திரபிரியங்கா கூறியது: காரைக்காலைச் சேர்ந்தவர் புதுச்சேரியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாரா? காரைக்காலைச் சேர்ந்த இதுவரை அமைச்சர்களாக இருந்தவர்களை தாண்டி இவர் காரைக்காலுக்கு என்ன செய்யப் போகிறார்? 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச்சராகியுள்ளார். அவர் எந்த வகையில் சாதிக்கப் போகிறார்? என்ற மூன்று வகையான சவால்கள் என் முன் இருப்பதை தெரிந்து கொண்டேன். எந்தத் துறை ஒதுக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த புதுச்சேரியின் சமமான வளர்ச்சிக்காக செயல்படுவேன். காரைக்கால் வளர்ச்சி என்பதை ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்தின் சமமான வளர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.புதுச்சேரியில் ஒரு திட்டம் தொடங்கப்படும் போது, அதே சமயத்தில் காரைக்காலிலும் அத்திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT