Published : 10 Jul 2021 05:59 PM
Last Updated : 10 Jul 2021 05:59 PM
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் காரைக்கால் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 10) காரைக்காலில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி அமைச்சர் ஏ.நமச்சிவாயம், சட்டப்பேரவை நியமன உறுப்பினர் அசோக் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ்பாபு, முன்னாள் எம்எல்ஏ வி.கே.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நமச்சிவாயம் கூறும்போது, ''காரைக்கால் மாவட்ட வளர்ச்சி மற்றும் கட்சிப் பணியில் கவனம் செலுத்தும் வகையில் மாதம் ஒரு முறை பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் காரைக்காலுக்கு வந்து செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் என்னென்ன வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்பதை ஆட்சியரிடம் கேட்டறிந்தேன். மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
காரைக்காலில் விரைவில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறந்து அதன் மூலம் மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்த முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி பிராந்தியங்களில் நின்று செல்வதில்லை என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண புதுச்சேரி முதல்வர், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்கமுடியாத காரணங்களால் விலையேற்றம் செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியிலேயே எரிபொருள் விலை பல முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் உணரவேண்டும். விலைக் குறைப்புக்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். புதுச்சேரியில் அடுத்த மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்வது தொடர்பாகக் கட்சியின் தேசியத் தலைமை முடிவெடுக்கும்.
புதுச்சேரி அமைச்சர்களுக்கான துறைகள் குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். குறிப்பிட்ட துறைகளைக் கேட்டு பாஜக யாரையும் நிர்பந்திக்கவில்லை. கூட்டணி அரசில் அந்தந்தக் கட்சிகள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கேட்பது வழக்கம். பாஜகவின் ஒரே நோக்கம் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அதற்கான பணியில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT