Last Updated : 10 Jul, 2021 02:04 PM

2  

Published : 10 Jul 2021 02:04 PM
Last Updated : 10 Jul 2021 02:04 PM

அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு; கூட்டணிக் கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது: புதுவை ஆளுநர் தமிழிசை  

புதுச்சேரி

அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது. ஆரோக்கியமான ஆலோசனைகளைச் சொல்லலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் தொடர் முயற்சிகளின் பயனாக கரோனா தொற்றுப் பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தவும் சுகாதாரத்துறை சார்பில் 3-வது தடுப்பூசித் திருவிழா இன்று (ஜூலை 10) முதல் 12-ம் தேதி நடத்தப்பட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வீராம்பட்டினத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது. இதனைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, சுகாதாரத்துறைச் செயலர் அருண், இயக்குநர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு, கரோனா நோடல் அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘முதலில் தடுப்பூசி போடுவதில் மிகப்பெரிய தயக்கம் இருந்தது. தற்போது அதுமாறி மக்கள் தயக்கமின்றித் தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர். இதற்காக சுகாதாரத்துறை உட்பட அனைத்துத் துறைகளுக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்ப்பிணிப் பெண்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இதனால் கர்ப்பிணிகள் எவ்வித பாதிப்புமின்றி குழந்தை பெற்றெடுப்பதற்காக அவர்களும் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் நேற்று முதல் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

புதுச்சேரியில் பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதனால், விடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதே வேகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் புதுச்சேரி முழுவதுமாகத் தடுப்பூசி போட்ட மாநிலமாக இருக்கும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்ட நாடுகள் முகக்கவசத்தை எடுத்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நமக்கும் வரவேண்டும். 3-வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், எச்சரிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் புதுச்சேரியிலும், தெலங்கானாவிலும் மிக வேகமாகவும், உறுதியாகவும் எடுத்துச் செல்ல உள்ளோம். புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்காகக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றபோது முடிவு செய்தோம். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கேட்கும்போது நிச்சயமாக பசுமை புதுச்சேரியாக மாறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனக் கூறினார். விரைவில் புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அதன் மூலம் நிலத்தடி நீரையும், மழை நீரையும் சேமிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளோம்.

புதுச்சேரியை எப்படியெல்லாம் முன்னேற்றலாம்? என்று குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும்போது ஒரு செயல் திட்டத்தை ஏற்படுத்தி வைத்துள்ளோம். இதையும் முதல்வருடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு திட்டமாகச் செயல்படுத்தும்போது புதுச்சேரிக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். முதற்கட்டமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இது தமிழகத்துக்கும் பலன் தரும். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அதற்கான செயல்திட்டத்தைத் தயராக வைத்திருக்குமாறு செயலரிடம் கூறியுள்ளேன்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருடனும் கலந்தாலோசித்து புதுச்சேரியை நல்ல சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கரோனாவை முதலில் ஒழித்துவிட்டால் அதன்பிறகு வளர்ச்சி திட்டங்களில் நாம் கவனம் செலுத்தலாம். முதல்வருடன் இணைந்து ஆளுநர் அலுவலகமும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும்.

வெளிநாடுகளில் இருந்து முதலீட்டைக் கொண்டுவருவதற்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் முதல்வர் கூட்டங்களை நடத்தியுள்ளார். பல வல்லுநர்களைச் சந்தித்துள்ளார். அமைச்சர்களுக்குப் பதவியேற்று வைப்பது என்னுடைய வேலை. கூட்டணிக் கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது. விரைவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அமைச்சர்கள் அவர்களுக்கான வேலையைப் பார்ப்பதற்கான சூழ்நிலை ஏற்படுவதற்கு என்னுடைய ஆரோக்கியமான ஆலோசனைகளைச் சொல்லலாம். இது தொடர்பான என்னுடைய விருப்பத்தை முதல்வரிடம் கூறுவேன்.

புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கிறோம். தடுப்பூசி குறைந்தாலும் முயற்சி செய்து வாங்குகிறோம். அனைத்துத் தடுப்பூசிகளும் நல்ல தடுப்பூசிகள்தான். அவற்றில் மாறுபாடு பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாளை மறுதினம் தெலுங்கானாவில் பழங்குடியினர் பகுதிக்குச் சென்று 2-வது டோஸ் போட்டுக்கொள்வேன்.

ஏற்கெனவே ஆலோனைக் கூட்டத்தில் டெங்கு குறித்துப் பேசியுள்ளோம். நேற்று வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதுச்சேரியில் இல்லை. இதில் அரசு மட்டுமின்றி பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சுகாதாரத்துறை மூலம் ஏற்படுத்தப்படும்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x