Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

‘ஆட்சி அமைத்த திமுக, அமைச்சரான செந்தில் பாலாஜி’- வேண்டுதல் நிறைவேறியதால் தீக்குளித்து உயிரை மாய்த்த போக்குவரத்து ஊழியர்

உலகநாதன்

கரூர்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டிக் கொண்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கோயில் முன்பு நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்தவர் சு.உலகநாதன்(60). அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தீவிரதிமுக அபிமானியான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பதுடன், கரூர் தொகுதியில் வி.செந்தில்பாலாஜி வெற்றிபெற்று அமைச்சரானால் உயிரைத்தியாகம் செய்வதாக, செந்தில்பாலாஜியின் குலதெய்வக் கோயிலான, கரூர் மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானதுடன், செந்தில்பாலாஜியும் அமைச்சரானதால், ஆனி அமாவாசை நாளான நேற்று மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயில் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

2 பக்கக் கடிதம்

இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் போலீஸார் அங்கு சென்றுவிசாரணை நடத்தி, உலகநாதன் எழுதிய 2 பக்கக் கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “எனது வேண்டுகோள் நிறைவேறியதால், என் சுயநினைவுடன் இறப்பைத் தேடுகிறேன்.

எனது 2-வது மகன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்தில் கடந்த 5 வருடங்களாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரை கரூர் மாவட்டத்துக்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என்பதே எனது இறுதி ஆசை” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனநல ஆலோசனை அவசியம்

இதுகுறித்து கரூர் காந்திகிராமம் விடியல் மருத்துவமனை மனநல மருத்துவர் கா.செந்தில்வேலனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

‘‘ஒவ்வொருவருக்கும் ஒருகுணம் இருக்கும். அதீத உணர்ச்சிவசப்படுதல், மிகை உணர்ச்சி, பயங்கர நெகிழ்ச்சி, தங்களை மறந்து சூழ்நிலையில் கரைந்து போதல், ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வை தனக்கே ஏற்பட்டதுபோல நினைத்தல் போன்ற காரணங்களால் இதுபோன்ற தவறான முடிவை சிலர்எடுக்கின்றனர்.

எனவே, இதுபோன்ற அதீத, மிகை உணர்ச்சி கொண்டவர்களை குடும்பத்தினர் கவனமுடன் கண்காணித்து, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, தவறான முடிவுகளுக்கு செல்வதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x