Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேதமான தொகுப்பு வீடுகளில் இருளர் இன மக்கள் அச்சத்துடன் வசித்து வருவதால், புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் இருளர் இன மக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக தளி, கெலமங்கலம், ஊத்தங்கரை மற்றும் பர்கூர் ஒன்றியங்களில் அதிகளவில் இருளர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு மூலம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.
தற்போது ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பங்களுக்கு மேல் இடநெருக்கடியுடன் வசிக்கும்நிலை உள்ளது. மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் 90 சதவீதத்திற்கு மேல் வீட்டின் மேற்கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், சுவற்றில் பல இடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்துடன் வசிக்கின்றனர்.
இதுகுறித்து நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்குட்பட்ட என்.தட்டக்கல் கிராமம், மலுவராயன் தெருவில் வசிக்கும் இருளர் இன மக்கள் கூறும்போது, வீடுகள் கட்டிக் கொடுத்து 35 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. சேதமான வீடுகளை அகற்றிவிட்டு, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித்தரக் கோரி பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்யும் அலுவலர்கள் வீடு கட்டித் தருவதாக வாய்மொழியாக கூறிவிட்டுச் செல்கின்றனர். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
நேற்று இப்பகுதியில் பெய்த மழையின் போது தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திகா (21) என்ற பெண்ணிற்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என வீட்டில் உள்ள அனைவரும் அச்சத்துடன் இரவில் உறங்க வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில் விடிய, விடிய உறங்காமல் இருக்கிறோம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, எங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT