Published : 02 Feb 2016 08:44 AM
Last Updated : 02 Feb 2016 08:44 AM
திருப்பூரில் 1-ம் வகுப்பு மாணவர், பள்ளி வளாகத்தில் உயிரிழந்தது தொடர்பாக, தனியார் பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இச் சம்பவத் தில் மகனை இழந்து தவிக்கும் பெற்றோர், “பள்ளி நிர்வாகம் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் முன்கூட்டியே கவனித்திருந்தால் இது போன்ற ஒரு துயரச் சம்பவமே நிகழ்ந்திருக்காது” என வேதனையுடன் தெரிவித்தனர்.
திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில், 1-ம் வகுப்பு மாணவரை கல்லால் அடித்ததால் உயிரிழந்ததாகக் கூறி, 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவரை கைது செய்து, சிறார் கூர் நோக்கு இல்லத்துக்கு மத்திய போலீ ஸார் அனுப்பினர்.
இறந்த சிறுவன் ஸ்ரீசிவராமின் தந்தை அருண்பிரசாத் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுக்கு முன் வங்கிப் பணிக்காக மும்பையில் இருந்து திருப்பூர் வந்தேன். ஸ்ரீசிவராம் (6) கேவிஆர் நகர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தான். கடந்த ஜன.27-ம் தேதி காலை 7.40 மணிக்கு பள்ளி வேனில் மகனை அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் ’உங்கள் மகன் கீழே விழுந்து காயம் அடைந்து விட்டார்’ என பள்ளித் தரப்பில் இருந்து போன் வந்தது. பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுவிட்ட தாகத் தெரிவித்தனர். அதன் பின், அந்த மருத்துவமனைக்குச் சென்ற போது, மகன் அங்கு இல்லை. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல் அளித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், எனது மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக என் மனைவி, ஆசிரியையை தொடர்பு கொண்ட போது, உரிய பதில் அளிக்கவில்லை. ஆசிரியர்கள் முன்கூட்டியே கவனித் திருந்தால் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவமே நிகழ்ந்திருக்காது. யாரிடமும் அதிர்ந்து பேசாத எனது மகனை இழந்துவிட்டு பெரும் துயரத்தில் வாழ்கிறோம்.
பள்ளி தரப்பில் இதுவரை சிறிய வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கும் வகையில் அந்தப் பள்ளி மீது கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அருண்பிரசாத் கூறினார்.
முதல் தகவல் அறிக்கை
போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில், ‘காலை 8.45 மணிக்கு, பள்ளியின் 1-ம் வகுப்பு சிறுவனை, 6-ம் வகுப்பு மாணவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள மாணவிகள் கழிப்பறைகள் அருகே அழைத்துச் சென்று, கையால் தள்ளியும் அடித்தும் சண்டை போட்டுள்ளார்.
அதை முதல் தளத்தில் இருந்து பார்த்த மாணவி, சக மாணவரிடம் தெரிவித்துள்ளார். அவர், கழிப்பறை அருகே சென்றபோது, அங்கிருந்த 6-ம் வகுப்பு மாணவர் சட்டை ரத்தக் கறையுடன் கழிப்பறை பின்புறம் இருந்து வந்துள்ளார்.
அப்போது 1-ம் வகுப்பு சிறுவனைப் பற்றி கேட்டபோது, பதில் சொல்ல மறுத்ததால் விளை யாட்டு ஆசிரியரிடம் தகவல் சொல்லியுள்ளார்…’ என்று சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மேலாளர் வெங்கடாச்சலம், “இறந்த சிறுவனின் பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டதால், பள்ளி தரப்பில் சென்று யாரும் பேசவில்லை” என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகனிடம் கேட்டபோது, “அனைத்து பள்ளிகளுக்கும், குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பாக, விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்பப் பட உள்ளது” என்றார் .
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
பள்ளியின் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி நேற்று கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைப் பெற்றோர் நேற்று முற்றுகையிட்டனர்.
விடுமுறைக்குப் பின்னர் நேற்று பள்ளி திறக்கப்பட்டபோது, ‘மாணவ-மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளியில் உள்ள கழிவறை, வகுப்பறையில் இருந்து தூரத்தில் உள்ளது. அதனை, பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படுவதே இல்லை’ என்று கூறி குழந்தைகளின் பெற்றோர் 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகலறிந்து வந்த, திருப்பூர் மத்திய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
‘கூடி விளையாட விடுவோம்’
மனநல மருத்துவர் வி.சிவராஜ் கூறியதாவது:
6 வயது சிறுவனை தாக்கிய, 12-வயது மாணவர் ‘பார்டர் லைன் டிஸ்ஆர்டரால்’ பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். ஒரு சிறிய அவமான வார்த்தை கூட, அவர்களது மனதை பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். ‘தான்’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீடுகளில், நிச்சயம் இந்த பாதிப்பு இருக்கும்.
‘தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்ற எண்ணம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். குழந்தையின் 3 வயதில் தொடங்கி 5 வயது வரை இந்த எண்ணம் வளர்ந்து கொண்டே போய் 7 வயதில் ‘பர்சனாலிட்டி டிஸ்ஆர்டராக’ மாறும்.
அதுபோன்ற சூழலில், வளரும் குழந்தைகளை பெற்றோர் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ்களை குழந்தை கள் விளையாட அனுமதிக்கக் கூடாது. இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள், சின்ன விஷயங்களுக் குக்கூட எளிதில் கோபம் அடையும், அழத் தொடங் கும். குழந்தை செய்வதெல்லாம் சரி என்ற எண் ணம் கூடாது. அடித்தால், அவனுக்கும் வலிக்கும், உனக்கும் வலிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். மதிய உணவைக் கூட, அனைவரும் பகிர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகள் குழுவாக விளையாடும்போது, வெற்றி தோல்வி பெறும்போது இதை உணர்வார்கள். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் பகிர்தல் மற்றும் கூடி விளையாடுதலை பெற்றோர் கற்றுத்தர வேண்டும். அனைத்துப் பெற்றோரும் குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். மாறாக, நற்பண்புகளுடன் வளர்கிறார்களா என்று பார்ப்பதில்லை.
வாரம் ஒரு நாளாவது, குழந்தைகளுடன் பேசி, மகிழ்ந்து அவர்களுடன் நேரம் செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT