Published : 10 Jul 2021 03:16 AM
Last Updated : 10 Jul 2021 03:16 AM
தொடர் மழை காரணமாக வாடல் நோய் தாக்கியதால் ஜவ்வாதுமலையில் இந்தாண்டு மிளகு விளைச்சலில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, ஜவ்வாதுமலையில் மிளகு உற்பத்தியை அதிகரிக்க தோட்டக் கலைத் துறையினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளமிட்டனர். இதற்காக, 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, நம்மியம்பட்டு ஊராட்சி தாதன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயியின் நிலத்தில் 200 மிளகு செடிகள் நடும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
மிளகு செடிகள் உயரமாக படர்ந்து செல்வதற்காக ‘சில்வர் ஓக்’ மரங்கள் நடப்பட்டுள்ளன. மூன்றாவது ஆண்டு முதல் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் ஒரு செடியில் 1 கிலோ மிளகு கிடைக்கும் என்றும், பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும், 30-வது ஆண்டில் ஒரு செடியின் மூலம் 80 முதல் 100 கிலோ மிளகு கிடைக்கும் என தோட்டக் கலைத் துறையினர் கணக்கிட்டு தெரிவித் திருந்தனர். இந்த திட்டம் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது சுமார் 200 ஏக்கரில் மிளகு செடி வளர்க்கப்பட்டுள்ளது.
ஜவ்வாது மலையில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் அறுவடையில் 1,500 கிலோ மிளகு சாகுபடி செய்த நிலையில், பருவம் தவறிய மழையால் இந்தாண்டு மிளகு விளைச்சல் பாதித்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட வாடல் நோய் தாக்கு தலில் இருந்து மிளகு செடிகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தோட்டக் கலைத் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால், நடப்பாண்டு 500 முதல் 800 கிலோ அளவுக்கு மிளகு உற்பத்தியாகலாம் என கூறுகின்றனர்.
மீண்டும் மிளகு செடிகள்
மேலும் அவர்கள் கூறும்போது, “தொடர் மழையால் வாடல் நோயால் பாதித்து, அழுகிய மிளகு செடிகளுக்கு மாற்றாக, 50 ஹெக்டேர் அளவுக்கு நடவு செய்ய இலவசமாக மிளகு செடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடி களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு ஒரு கிலோ மிளகுக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை கிடைக்கிறது. மகளிர் குழுக்கள் மூலம் மிளகு விற்பனை செய்யப்படுகிறது” என்றனர்.
பாதுகாக்க பயிற்சி தேவை
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “மிளகு செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளை தோட்டக் கலைத் துறையினர் கையாள வேண்டும். வாடல் நோய் தாக்குதலில் மிளகு விளைச்சல் கணிசமாக குறைந்துவிட்டது. ஜவ்வாதுமலையில் உள்ள விவசாயிகள் பலரும் முதல் தலைமுறையாக மிளகு சாகுபடி செய்து வருகிறோம். எனவே, நோய் தாக்குதலில் மிளகு செடிகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து பயிற்சி அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT