Last Updated : 09 Jul, 2021 09:51 PM

 

Published : 09 Jul 2021 09:51 PM
Last Updated : 09 Jul 2021 09:51 PM

கோவையில் வசிக்கும் வெளிநாட்டவர் விவரங்களை தர வெளியுறவுத் துறைக்கு மாநகர காவல்துறையினர் கடிதம்

கோவை

கோவை மாநகரில் வசிக்கும் வெளிநாட்டினரின் விவரங்களை தருமாறு, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, மாநகர காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவைக்கு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பலவித காரணங்களுக்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.

கோவைக்கு வரும் வெளிநாட்டினர், தங்களது பெயர் விவரம், கோவையில் எங்கு வசிக்கின்றனர், எத்தனை நாட்கள் வசிக்கப் போகின்றனர், அவர்களின் விசா விவரம், என்ன காரணத்துக்காக வந்துள்ளனர் என்பது போன்ற தகவல்களை முன்பு காவல்துறையினர் சேகரித்து வந்தனர். அதாவது, மாநகரப் பகுதி என்றால் மாநகர காவல்துறையின் குற்றப் பதிவேடுக் கூடப்பிரிவினரும் (சிசிஆர்பி) , மாவட்டப் பகுதி என்றால், மாவட்டக் காவல்துறையின் குற்றப்பதிவேடு கூடப்பிரிவினரும் (டிசிஆர்பி) விண்ணப்பம் மூலம் அவர்களது விவரத்தை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இம்முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் விவரங்களை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், எப்.ஆர்.ஆர்.ஓ எனப்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு மையத்தில் பதிவு செய்தால் போதும் என மாற்றப்பட்டது.

இதனால், இங்கு வசிக்கும் வெளிநாட்டினர் விவரங்கள் மாநகர, மாவட்டக் காவல்துறையிருக்கு தெரியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கோவை சரவணம்பட்டி அருகே, முறைகேடாக வசித்து வந்த, வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர். இதேபோல், திருப்பூரிலும் சில தினங்களுக்கு முன்னர், முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த மூவர் காவல்துறையினரிடம் சிக்கினர். இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, கோவை மாநகரில் வசிக்கும் வெளிநாட்டினரின் விவரங்களை சேகரித்து, கண்காணிக்க மாநகர காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகர காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் ’இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் இன்று (ஜூலை 09) கூறும்போது,‘‘ இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரின் விவரம், அவர்களது விசா காலம், எங்கு தங்கியுள்ளனர், எதற்காக தங்கியுள்ளனர் என்பது போன்ற விவரங்களை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எப்.ஆர்.ஆர்.ஓ அலுவலகத்தினர் சேகரித்து வருகின்றனர். இதில், கோவையில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறும், இதில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எப்.ஆர்.ஆர்.ஓ-வுக்கு, கோவை மாநகர காவல் ஆணையர் சார்பில் சில தினங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கண்காணிபுப் பணியை தீவிரப்படுத்த, மேற்கண்ட விவரங்களை தொடர்ந்து தர அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x