Published : 09 Jul 2021 07:48 PM
Last Updated : 09 Jul 2021 07:48 PM
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடந்தது. உட்கட்சிப் பிரச்சினை, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, கூட்டணி விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் நெளிவு சுளிவோடு நடக்கும் நிலை ஏற்பட்டது. பாஜகவுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க, அதையே காரணம் காட்டி பாமகவும் கூடுதல் இடத்தைப் பெற்றது. அதையே காரணம் காட்டி தேமுதிகவும் அதிக இடங்களைக் கேட்க, அதைத் தர மறுத்ததால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.
இதனால் தேமுதிக வெளியேற, அது ஒருவகையில் அதிமுகவுக்கு பாதிப்பைத் தேர்தலில் உருவாக்கியது. அதேபோல் பாமகவைத் திருப்திப்படுத்த 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட, அது தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பாஜக கூட்டு, இரு தலைவர்கள் இடையேயான போட்டியில் வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட சுணக்கம் ஆகியவை பல தொகுதிகளில் அதிமுக தோல்விக்குக் காரணமாக அமைந்தன.
அமமுகவை சரியாகக் கையாளாததால், 21 தொகுதிகளில் அமமுக, வாக்குகளைப் பிரித்ததன் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய முடிவில் தெரியவந்தது. இதுபோன்ற அம்சங்களால் 65 தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் வெற்றிபெற முடிந்தது. அதன் பின்னரும் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா தேர்வில் சிக்கல் எழுந்தது.
முடிவில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். தொடர்ந்து மழை விட்டாலும் தூவானம் விடாத குறையாக சசிகலா தொலைபேசி பேச்சு, பாமக விமர்சனம், ஓபிஎஸ் தனி அறிக்கை, பாஜக குறித்த அமைச்சர்களின் விமர்சனம், மணிகண்டன் கைது எனப் பல விஷயங்களில் அதிமுக பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலும் வர உள்ளது. இதையடுத்து அதிமுக மீண்டும் தனது வலிமையை நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனக் கூட்டணிக் கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும், தனது கட்சித் தொண்டர்களுக்கும் நிரூபித்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்று திமுக ஆட்சிக்குச் சவாலாக இருக்க முடியும் என்கிற நிலையில் அதிமுக தலைமை உள்ளது.
இப்படிப்பட்ட பிரச்சினையில் அதிமுக தலைமை, மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியினருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் வளர்ச்சி குறித்துப் பேசினாலும் மேற்கண்ட நெருக்கடிகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT