Published : 09 Jul 2021 02:08 PM
Last Updated : 09 Jul 2021 02:08 PM
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கிய நபருக்கு 'டாக்டர்' எம்எல்ஏ லட்சுமணன், கட்சி கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப்போட்டு முதலுதவி செய்தார்.
விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், தன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது ராகவன்பேட்டை அருகே பைக்கில் வந்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் ஜெயகுமார் (24) என்பவர், விபத்தில் சிக்கி இடது கால் எலும்பு முறிவுடன் சாலையோரம் கிடந்தார்.
இதனைக் கண்ட எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், அங்கு சென்று விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்த ஜெயகுமாருக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினார். காலில் கட்டுப்போடத் துணிகள் அப்போது இல்லாததால், காரில் இருந்த திமுக கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப் போட்டு, சிகிச்சை அளித்தார். இதற்கிடையே அங்கு வந்த ஆம்புலன்ஸில் ஜெயகுமாரை ஏற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின் எம்எல்ஏ புறப்பட்டுச் சென்றார்.
விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன், பதவிக்கு வரும்முன்பு விழுப்புரத்தில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT