Published : 09 Jul 2021 01:49 PM
Last Updated : 09 Jul 2021 01:49 PM
கர்ப்பிணிகள் எந்தவிதத் தயக்கமுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தன. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று (ஜூலை 9) தொடங்கியது. இம்முகாமை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கரோனா நோடல் அதிகாரி ரமேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் முரளி, முருகன், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு, மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எனப் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு வருகிறோம்.
இந்நிலையில் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இன்று முதல் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும். புதுச்சேரியில் இதுவரை 5.5 லட்சம் தடுப்பூசிகள் போட்டுள்ளோம். இதில் எந்தவித பெரிய பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கரோனா 3-வது அலை வருமா? என்று தெரியாது. இருப்பினும், பாதுகாப்பு கருதி தடுப்பூசியை அதிகரிப்பதற்காக 3-ம் கட்டமாக தடுப்பூசி திருவிழா 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு வேண்டிய 68 ஆயிரம் தடுப்பூசிகள் நம்மிடம் வந்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் கிடையாது.
எனவே மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் எந்தவிதத் தயக்கமுமின்றி வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.’’
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு கூறுகையில், ‘‘கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று வந்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் உள்ளது. எனவே, கரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தபிறகு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதால் கரோனா வருமா? என்ற அச்சம் வேண்டாம். தடுப்பூசி போட்டதால் யாருக்கும் கரோனா வரவில்லை. கர்ப்பிணிகள் 9 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT