Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
தமிழக அரசின் ரூ. 1,000 உதவித் தொகையை பெற முன்னேற்பாடாக குடும்ப அட்டையில் தங்கள் கணவரின் புகைப்படங்களை அகற்றி விட்டு, தங்கள் படங்களை சேர்க்குமாறு பெண்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், தற்போது நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் போன்றவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், ‘குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும்’என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் எழுந்துள்ளது. இதைப் பெற ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டையில் உள்ள தங்களது குடும்பத் தலைவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, தங்களது புகைப்படத்தை இடம்பெற வைக்கும் முயற்சியில் குடும்பத் தலைவிகள் இறங்கியுள்ளனர்.
‘குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை’ திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருப்போரே அந்தத் திட்டத்துக்கு தகுதியானோர்’ என்றுநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கூறி வருவதால், புகைப்படத்தை மாற்ற, விண்ணப்பங்களுடன் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி வந்த சில பெண்களிடம் கேட்டபோது, “போட்டோவை மாற்றினால் ரூ.1,000 கிடைக்குமாம். அதனால் மாற்ற வந்திருக்கிறோம். இதை மாற்றித் தர ரூ.500 வரை (இடைத்தரகர்கள்) கேட்டுள்ளனர்” என்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் இதற்கான விண்ணப்பத்தை அளிப்பதை காண முடிந்தது. இதுபற்றி அங்கிருக்கும் அலுவலரிடம் கேட்டபோது, “இதுவரை சுமார் 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு இதுவரை இதுபற்றி எந்தஅறிவிப்பும் வெளியிடாத நிலையில், மக்கள் தாங்களாகவே முன்வந்து , புகைப்படத்தை மாற்றுமாறு கோருகின்றனர்” என்று கூறினார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உதயக்குமாரிடம் கேட்டபோது, “அந்தத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு அரசு உத்தரவு பிறப்பித்தால், கவுரவகுடும்ப அட்டைதாரர் தவிர்த்து (NPHH-S), சர்க்கரை, அரிசி குடும்பஅட்டைதார்களுக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கும்பட்சத்தில் குடும்பத் தலைவியின் அட்டைப்படம் இடம் பெற வேண்டும். இருப்பினும் அரசு இதற்கான வழிகாட்டுதலின்றி நாங்களாக இதில் எதையும் செய்ய இயலாது. அரசு வழிகாட்டுதல் கிடைத்தவுடன் நாங்களாகவே, குடும்ப அட்டைதாரரை அழைத்து, மாற்றி விடுவோம். தேவையின்றி மக்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT