Last Updated : 09 Jul, 2021 03:13 AM

 

Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM

கோவையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் விரைவில் தொடங்கப்படுமா?

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் காணப்படும் ஹாக்கி மைதானம். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிளப் அணிகளில் இருந்து மாநில, தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில், கோவை மாவட்டத்தில் இருந்து வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பங்கேற்பதும், இவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.

சென்னை மட்டுமின்றி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் கூட சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால் கோவையில் இன்னும் உருவாக்கப்படவில்லை.

ஹாக்கி ஆர்வலர்கள், கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் மற்றும் வீரர்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் 2013-ல் அறிவிப்பு வெளியானது. 2014-ம் ஆண்டு இப்பணிக்காக ரூ.6 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ஆரம்ப கட்ட பணிகளோடு முடங்கி கிடக்கிறது.

காலாவதியான மூலப்பொருட்கள்

மைதானத்தில் செயற்கை புல் தரை அமைப்பதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய தரைத்தள பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதுவும் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்க இயலாத வகையில் சேதமடைந்துள்ளன. மேலும், ‘வாங்கி 4 மாதங்களுக்குள் பதிக்கப்பட வேண்டிய செயற்கை புல் தரைக்கான விரிப்புகள், மூலப்பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிட்டன’ என்கின்றனர் கோவை மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள்.

இச்சூழலில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

இதுகுறித்து கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறும்போது, “தொடக்கத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பிறகு இத்திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ரூ.21 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. சுற்றுச்சுவர், தரைத்தளம் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று, அவையும் தரமற்ற நிலைக்கு வந்துவிட்டன. இதனால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

100 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலத்தில் செயற்கை புல் தரை அமைக்கப்பட வேண்டும். வீரர்கள் காயமடைவதை தவிர்க்கும் வகையில் தானியங்கி தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரிங்லர்), மண் உள்ளே வராத வகையில் ‘பேவர் பிளாக்’ கட்டமைப்பு என அனைத்தும் சர்வதேச ஹாக்கி பெடரேஷன் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட வேண்டும். இல்லை யெனில், அவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க மாட்டார்கள். சான்றிதழ் வழங்கப்படவில்லை எனில் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாது.

தற்போது அமைச்சர் ஆய்வுக்கு பிறகு பணிகள் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் சார்பில் புதிதாக திட்ட மதிப்பீடு கேட்டுள்ளனர். ஒரு வாரத்துக்குள் ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கவுள்ளோம். விரைவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவையும் சந்திக்கவுள்ளோம்.

மேற்கு மண்டலத்தில் நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரை சர்வதேச தரத்திலான மைதானம் இல்லை. இது முதல் மைதானமாக அமைவதுடன், மேற்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் திறனை வளர்த்துக் கொள்ள உதவும்” என்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் கூறும்போது, “கோவையை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் முதலே ஹாக்கி விளையாட்டில் நல்ல வளர்ச்சி உள்ளது. தேசிய அளவிலான போட்டிகளுக்கு சென்று வெற்றி பெற்று வருகின்றனர். இதை வளர்த்தெடுக்க சர்வதேச தரத்தில் விரைவாக மைதானம் அமைக்க வேண்டியது அவசியமானது” என்றார்.

மாநகராட்சி பொறியாளர் ஆ.லட்சுமணனிடம் கேட்டபோது, “ஹாக்கி மைதானம் அமையவுள்ள இடத்தை மிகப்பெரும் பல்துறை விளையாட்டுக்கான மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

வீரர்கள் தங்க விடுதி வசதி

கோவையை சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, ‘கோவையில் ஹாக்கி வீரர்கள் தங்குவதற்கான விடுதி வசதியையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பயிற்சி முகாம்கள் நடத்தவும், அதிகளவில் திறமையான புதிய வீரர்களை உருவாக்கவும் வாய்ப்புகள் அமையும். வெளி மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வந்து தங்கி தரமான பயிற்சி பெறவும் இது உதவும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x