Published : 08 Mar 2014 03:03 PM
Last Updated : 08 Mar 2014 03:03 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு தொகுதி போதாது என்று தெரிவித்ததால், அது பற்றி விவாதித்து மேலும் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்றைய தினம் மேலும் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதே?
கருணாநிதி: ஏற்கனவே ஒரு தொகுதி தரப்பட்டது. போதவில்லை என்று வலியுறுத்தியதால், அது பற்றி விவாதித்து இன்றையதினம் மீண்டும் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: தி.மு.க. கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா, அதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறதா?
கருணாநிதி: இது வரை இல்லை.
கேள்வி: அப்படி அவர்கள் முன் வந்தால் எத்தனை தொகுதிகள் அவர்களுக்கு தருவீர்கள்?
கருணாநிதி: இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
கேள்வி: தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். ஆனால் அவர்கள் வராமல், பா.ஜ.க. அணிக்குச் சென்று விட்டார்களே; இதைப்பற்றி உங்கள் கருத்து?
கருணாநிதி: கருத்து எதுவும் இல்லை.
கேள்வி: இடது சாரிகள் வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறதா?
கருணாநிதி: வந்தால் வரவேற்போம் என்று சொல்லியிருக்கிறேனே தவிர வருவார்கள் என்று நான் சொல்லவில்லை. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதி ஒதுக்கீடு:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்று மேலும் ஒரு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று திருவள்ளூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT