Last Updated : 08 Jul, 2021 07:56 PM

 

Published : 08 Jul 2021 07:56 PM
Last Updated : 08 Jul 2021 07:56 PM

'முதல்வன்' படப் பாணியில் திருப்பத்தூர் ஆட்சியர் அதிரடி: ஆய்வுக்குச் சென்ற இடத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்ட்’

மல்லிக்குட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் கட்டி வரும் வீட்டை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியத்தில் ஆய்வுக்குச் சென்ற திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, 'முதல்வன்' திரைப்படப் பாணியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை இடைநீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, 102 ரெட்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டார்.

அப்போது, கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா? நடப்பாண்டில் முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா? எனப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களின் தினசரி வேலை அட்டையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, மல்லிக்குட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, கோவிந்தராஜ் கட்டி வரும் வீட்டின் பட்டாவை வாங்கிப் பார்த்தபோது அவரது தந்தை பெயரில் பட்டா இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு ஆட்சியர் அமர் குஷ்வாஹா, கோவிந்தராஜ் தந்தை பெயரில் பட்டா இருக்கும்போது, கோவிந்தராஜ் பெயரில் வீடு கட்டப் பணி ஆணை வழங்கியது எப்படி? என ஊராட்சி செயலாளர் ஆனந்தனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஊராட்சி செயலாளர் ஆனந்தன் முறையான பதில் அளிக்காமல் மழுப்பியதால், அவரை அங்கேயே பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். 'முதல்வன்' சினிமா பாணியில், ஆய்வு செய்த இடத்திலேயே முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

102 ரெட்டியூர் ஊராட்சி ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ''ஒவ்வொரு ஊராட்சி செயலாளரும் கிராம வளர்ச்சிக்கு உண்மையாகப் பணியாற்ற வேண்டும். அதேபோல, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்ய வேண்டும்.

அரசின் விதிமுறைகளை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் எம்.பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வுசெய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாகச் செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் குளறுபடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளவர்களுக்கான தீர்வுகளை அரசு அலுவலர்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்கக் கூடாது. தகுதியுள்ள மனுக்கள் நிராகரிக்கப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஆட்சியர் தெரிவித்தார்.

ஆட்சியர் ஆய்வு செய்தபோது வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், மணவாளன், ஒன்றியப் பொறியாளர் செல்வி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x