Published : 08 Jul 2021 06:54 PM
Last Updated : 08 Jul 2021 06:54 PM
கரோனா இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. 3-வது அலையைத் தடுக்க வேண்டுமென்றால் அது தடுப்பூசியால் மட்டும்தான் முடியும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை கரோனா இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் 100 சதவீதத் தடுப்பூசி செலுத்துதலைத் தீவிரப்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் கரோனா தடுப்பூசித் திருவிழா வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட நிலையங்களில் நடைபெற உள்ளது.
இந்தத் தடுப்பூசித் திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்படுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் அரசு செயலர்கள் உதயகுமார், வல்லவன், துணை மாவட்ட ஆட்சியர் வடக்கு கந்தசாமி, துணை மாவட்ட ஆட்சியர் தெற்கு கிரிசங்கர், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் ஸ்ரீராமுலு, போக்குவரத்து ஆணையர் சிவகுமார் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கடந்த இரண்டு தடுப்பூசி திருவிழாக்களைப் போல இந்தத் தடுப்பூசித் திருவிழாவையும் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்துவது, தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள், தடுப்பூசித் திருவிழாவைச் சிறப்பாக நடத்தத் தேவையான மருத்துவ உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது, முகாம் நடைபெறும் மையங்களில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் சுகாதாரத்துறைச் செயலர் அருண் கூறியிருப்பதாவது:
‘‘கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒருநாள் தொற்று 2 ஆயிரம் வரை வந்தது. அது இன்று 200க்குள் உள்ளது. இதன் மூலம் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது.
ஆனாலும், கரோனா இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. 3-வது அலையைத் தடுக்க வேண்டுமென்றால் அது தடுப்பூசியால் மட்டும்தான் முடியும். இதற்காகத்தான் மற்றொரு தடுப்பூசித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல் டோஸ் தடுப்பூசி 4.75 லட்சம் பேருக்குப் போட்டுள்ளோம். இரண்டாவது டோஸ் 60 ஆயிரம் பேருக்குப் போட்டுள்ளோம். இதன் மூலம் 45 முதல் 50 சதவீதம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை எந்தவிதமான உயிரிழப்பும், ஒவ்வாமையும் ஏற்படவில்லை.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் தீவிரத்தன்மையுடன் அனுமதிக்கப்பட்ட 97 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, தடுப்பூசி போட்டால் கரோனாவைத் தடுக்கலாம். தீவிரத் தன்மைக்குச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆகவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசித் திருவிழா ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நடைபெறும்.’’
இவ்வாறு அருண் தெரிவித்தார்.
துணை ஆட்சியர் (தெற்கு) கிரிசங்கர் கூறும்போது, ‘‘கரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் வித்தியாசம் என்னவென்றால், முதல் அலையில் நகரத்து மக்களும், இரண்டாவது அலையில் கிராமப்புற மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
ஆகவே, கரோனா தடுப்பூசி போடாமலும், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமலும் இருந்தால் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதில் அதிக அளவில் கிராமப்புற மக்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புற மக்கள் தடுப்பூசியை முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT