Published : 08 Jul 2021 03:59 PM
Last Updated : 08 Jul 2021 03:59 PM
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல பாஜகவினர் யார், அவர்கள் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை, சொல்லவும் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியைத் தழுவியது'' என்று பேசினார். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
''அதே எண்ணம்தான் எங்களுக்கும் உள்ளது. உங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் குறைவான இடங்களைப் பெற்றோம்'' என கே.டி.ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்திருந்தனர்.
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இவர் கருத்தை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
87,403 ஓட்டுகள் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சிவி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.ஆர்.சேகருக்கு அந்த உரிமை இல்லை என விமர்சித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி:
சி.வி.சண்முகம் விழுப்புரம் அதிமுக செயல்வீரகள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று கூறியுள்ளாரே?
ஒரு கட்சியின் உள்ளே நடக்கும் உள்கட்சி விவாதத்தில் பல்வேறு கருத்துகள் வரும். அதை ஒட்டியோ, ஒட்டாமல் இருக்கிற விஷயங்களையோ கட்சி நலன் கருதி சில கருத்துகள் சொல்வது வழக்கம்.
கட்சிக்காரர்கள் பல்வேறு கருத்துகள் சொல்லலாம். அதை ஆஃப் த ரெக்கார்டாகத்தான் சொல்ல முடியும். அதைக் கூட்டம் கூட்டிச் சொல்ல முடியாது. அதைக் கட்சியின் கருத்தாகவும் கூற முடியாது.
ஆஃப் த ரெக்கார்டாக எதை வேண்டுமானாலும் பேசலாமா?
அதாவது ஆன் ரெக்கார்டு என்பது நான் இப்போது உங்களிடம் பேட்டியாக அளிக்கிறேன். அதுபோன்று வரும். ஆஃப் த ரெக்கார்டு என்பது கட்சி ஊழியர்கள் மத்தியில் பேசுவதை கேமரா வைத்து எடுத்துக்கொண்டு அதைப் போடுவதாகும். அதை அதிகாரபூர்வ கருத்தாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும். அது ஆஃப் த ரெக்கார்டுதான். கட்சிதான் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும். தேர்தல் நேரம் இதுவல்ல. அதனால் கட்சிக் கூட்டத்துக்குள் பேசியதை முன்முதிர்ச்சியான ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.
சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பொருளாளர் கூறியுள்ளாரே?
எங்களுக்கு யாரும் உத்தரவிட முடியாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வெளியில் அவர் பேசாத விஷயம் அது. கட்சிக் கூட்டத்திற்குள் பேசியதைக் குற்றம் சொல்ல இவர்கள் யார்? ஆகவே, அவர்கள் கட்சி வேலையை அவர்கள் பார்க்கட்டும், எங்கள் கட்சி வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஆகவே, அவர் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை, சொல்லவும் கூடாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT