Published : 08 Jul 2021 03:17 PM
Last Updated : 08 Jul 2021 03:17 PM
தஞ்சாவூர் மாநகரில் தொடர்ந்து 457 நாட்களாக தினமும் 600 பேருக்குத் தன்னார்வ அமைப்பு ஒன்று இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது. கரோனாவால் தொடங்கப்பட்ட இந்த அமுதசுரபி அன்னதான திட்டம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
கரோனா ஊரடங்கு தொடங்கியபோது, வெளி மாநிலங்களில் இருந்து தஞ்சாவூரில் தங்கி வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டபோது, அவர்களுக்கு தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் உள்ள 'மதர் தெரசா பவுண்டேசன்' என்ற தன்னார்வ அமைப்பு உணவு வழங்கத் தொடங்கியது. தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு என தினமும் 600 பேருக்கு மதிய உணவைத் தொடர்ந்து 457 நாட்களாக இன்று (8-ம் தேதி) வரை வழங்கி வருகிறது.
ஆரம்பத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அருகருகே உள்ள மாவட்டங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறுவோருக்கும், உடன் தங்கியிருப்பவர்களுக்கும் ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமுதசுரபி அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் நாள்தோறும் 300 பேருக்கு உணவு வழங்கத் தொடங்கி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று தினமும் 600 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மதர் தெரசா பவுண்டேசனின் தலைவர் ஏ.ஆர்.சவரிமுத்து கூறும்போது, ''எங்கள் அமைப்பு சார்பில் முதியோர், ஆதரவற்ற மாணவர்களை தனித்தனியாகப் பராமரித்து வருகிறோம். கரோனா முதல் அலையின்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவுரையின்படி வெளிமாநில இளைஞர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினோம்.
பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருடன் தங்கியுள்ளவர்களுக்கும் உணவு வழங்கும் அமுதசுரபி அன்னதான திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் முதலில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கத் தொடங்கினோம். தற்போது நாளொன்றுக்கு 600 பேருக்கு மதிய உணவு, மருத்துவமனை மற்றும் மாநகரம் முழுவதும் உள்ள ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் தேடித்தேடி வழங்கப்படுகிறது.
எங்களது இந்த சேவையைப் பார்த்த பலரும் தாங்களாக முன்வந்து, அரிசி, காய்கறிகள், விறகு, மளிகைப் பொருட்கள் எனத் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் செலவாகிறது. யாரிடமும் நாங்கள் உதவி எனக் கேட்கவில்லை, அவர்களாகவே முன்வந்து அமுதசுரபி அன்னதான திட்டத்தில் இணைந்து உதவி வருகின்றனர்.
வாரத்தில் ஏழு தினங்களுக்கும் 7 வகையான உணவைப் பொட்டலத்தில், பார்சலாகத் தரமாக வழங்குகிறோம். கரோனாவால் தொடங்கிய இந்த அமுதசுரபி அன்னதான திட்டம் தொய்வின்றித் தொடர்ந்து இனியும் செயல்படும்'' என்று ஏ.ஆர்.சவரிமுத்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT