Published : 08 Jul 2021 03:13 AM
Last Updated : 08 Jul 2021 03:13 AM

ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் ஸ்ரீகணேசன் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்

சென்னை

ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் ஸ்ரீகணேசன் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து, மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக நேற்று மாற்றியமைக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

2014 மே 26-ல் பிரதமர் மோடிதலைமையில் பாஜக அரசு அமைந்தது. அப்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்றபொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சரானார். 2019 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட தேர்வாகவில்லை. இதனால் மோடியின் 2-வது அரசில் தமிழகத்திலிருந்து யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருதப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1977 மே 29-ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது அவரது கிராமத்துக்கு ஆர்எஸ்எஸ் கிளையான ஷாகா தொடங்கவந்த அந்த அமைப்பின் முழுநேர ஊழியர் ஸ்ரீகணேசனின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.

சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இணைந்து, அதன் மாநில துணைச் செயலராக செயல்பட்டார். முதுநிலை சட்டப் படிப்பு முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்கிய முருகன், சில ஆண்டுகள் சுவாமி தயானந்த சரஸ்வதி நிறுவிய 'தர்ம ரக்ஷண சமிதி' அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

பின்னர் பாஜகவில் இணைந்த எல்.முருகன், 2009-ல் பாஜக எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜக சார்பில் ராசிபுரம் (தனி), சங்கரன்கோவில் (தனி) தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றிவாய்ப்பை இழந்தார். கடந்த 2016-ல் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வெற்றிவேல் யாத்திரை

அந்த பதவிக் காலம் முடிய சில மாதங்களே இருந்த நிலையில், கடந்த 2020 மார்ச் 11-ல்தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். எல்.முருகன் நடத்திய ‘வெற்றிவேல் யாத்திரை' தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் மத்திய இணை அமைச்சராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும், தமிழகத்திலிருந்து அவர் எம்.பி.யாக வாய்ப்பு இல்லாததால், வேறு மாநிலத்தில் இருந்து அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x