Last Updated : 07 Jul, 2021 07:25 PM

 

Published : 07 Jul 2021 07:25 PM
Last Updated : 07 Jul 2021 07:25 PM

ஜமாத் விலக்கம், கல்லறைத் தோட்ட மறுப்புப் பிரச்சினைகளில் சிறுபான்மையினர் ஆணையம் தலையிடுமா?- பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக இன்று பதவியேற்றுள்ளார் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ். ஆணையத்தின் உறுப்பினர்களாக இஸ்லாமிய, ஜெயின், புத்த மதத்தினரும், மொழிச் சிறுபான்மையினரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன? அதன் மூலம் அவர் செய்யத் திட்டமிட்டிருக்கும் பணிகள் என்ன?

'இந்து தமிழ்' இணையதளத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையம் போன்றவை பல பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதை பத்திரிகைச் செய்திகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால், சிறுபான்மையினர் நல ஆணையத்தின் செயல்பாடு அப்படியிருப்பதாகத் தெரியவில்லை. இனியாவது இந்த ஆணையம் அத்தகைய சுறுசுறுப்புடன் இயங்குமென எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக இருக்கும். ஏனென்றால், இப்போது இந்த ஆணையம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் முழு நேரச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆணையத்தின் உறுப்பினர்கள் கூட இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்களா என்று மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். ஆகவே, நிச்சயமாக இந்த ஆணையத்தின் பணி, சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும்.

சிறுபான்மையினர் நல ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?

தமிழகத்தில் இருக்கிற மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் ஆகியோரின் சமூக, பொருளாதார, கலாச்சார பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாப்பது. அவர்களை ஒட்டுமொத்தச் சமூகத்தினுடைய வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் இணைப்பது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்கினை அதிகப்படுத்துவது. அரசாங்கம் அவர்களுக்குத் தீட்டியிருக்கிற திட்டங்களுடைய பயன் அவர்களைச் சென்றடைகிறதா என்று கண்காணிப்பது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் எங்கேயாவது அவர்களுடைய வாழ்வியல் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதற்கான நிவாரணத்தைத் தேடிக் கொடுப்பது. சிறுபான்மை மக்களது நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான திட்டங்களை அரசுக்குப் பரிந்துரை செய்வது. மொத்தத்தில் அரசாங்கத்துக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே உறவுப் பாலமாக நல்லெண்ணத் தூதராகச் செயல்படுவதுதான் ஆணையத்தின் அதிகாரங்கள்.

இந்தியாவில் தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்தவர்களாகவும், சான்றிதழில் இந்துவாகவும் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். தங்களைக் கிறிஸ்தவர்களாகப் பதிவு செய்துகொண்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்பட்டுவிடும் என்பதே அதற்குக் காரணம். வடமாநிலங்களில் நியோபுத்திஸ்ட்டுகளுக்கு (புதிதாக புத்த மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டோர்) பழையபடியே இட ஒதுக்கீடு தொடர்கிறது. இதே நிலை தமிழகத்திலும் ஏற்படுமா?

மதம் மாறிய புத்தர்கள், சீக்கியர்களுக்குப் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசியல் சாசனச் சட்டத்தில் முன்பே திருத்தம் கொண்டுவரப்பட்டுவிட்டது. அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே கிறிஸ்தவர்களையும் அதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அதனை நிராகரித்துவிட்டார்கள். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குப் போட்டார்கள். அவர்களுக்குப் பழையபடி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தற்போது உச்ச நீதிமன்றமும் பரிந்துரை செய்திருக்கிறது.

ஆனால், இன்றைய மத்திய அரசு அந்த சட்டத் திருத்தத்தில் கிறிஸ்தவர்களைச் சேர்ப்பதற்குத் தயாராக இல்லை. நடந்து முடிந்த தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் கூட மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்குப் பட்டியலின மக்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கச் செய்வோம் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இதைச் செய்ய வேண்டிய இடத்தில் இருப்பது மத்திய அரசுதான். எனவே, இதற்கான பரிந்துரைகளை நாங்கள் செய்வோம். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வழியாகவும், நம்முடைய தமிழக முதல்வர் வழியாகவும் இதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

இது வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்போரும் கிறிஸ்தவர்களாக மாறினால், பிற்படுத்தப்பட்டோர் பட்டிலுக்குப் போய்விடுகிறார்கள். உதாரணமாக, வன்னியர் சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டு சென்றபோது, வன்னிய கிறிஸ்தவர்களுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே இருந்தார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கிறிஸ்தவ வன்னியர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அவசர கதியில் செய்யப்பட்டதால் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ஆய்வு செய்து, அறிக்கை பெற்று அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என்று கூறி அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வைத்துவிட்டது. இந்தப் பிரச்சினையையும் மாநில அரசின் கவனத்துக்கு நாங்கள் எடுத்துச் செல்லவிருக்கிறோம். இதைச் செய்யும் அதிகாரம் நம்முடைய மாநில அரசுக்கே உண்டு என்பதால், முதல்வர் நிச்சயமாக இதைச் செய்வார் என்று நம்புகிறோம்.

சாதி விலக்கம் போல சில முஸ்லிம் ஜமாத்துக்கள், ஒரு சில இஸ்லாமியக் குடும்பங்களை ஜமாத் விலக்கம் (பத்வா) செய்கின்றன. கிறிஸ்தவ சபைகளிலும் கூட சிலருக்குக் கல்லறைத் தோட்டத்தில் இடம் கொடுக்காத அநீதிகள் நடக்கின்றன. அதேபோல, "முஸ்லிம் கடையில் பொருள் வாங்காதே, வடநாட்டுக்காரன் கடைகளைப் புறக்கணியுங்கள்" என்பன போன்ற பிரச்சாரங்களும் நடக்கின்றன. இந்தப் பிரச்சினைகளை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

மத, மொழிச் சிறுபான்மையினர் வாழ்வியல் உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்தால் அந்த புகார்களை ஆணையம் விசாரிக்கும். விசாரித்து அதற்கேற்ப சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவி செய்வோம்.

மும்பையில் வயதான கிறிஸ்தவப் பாதிரியார் ஸ்டேன் சுவாமி கடுமையான உடல்நல பாதிப்பிலும் கூட ஜாமீனோ, நீராகாரம் அருந்துவதற்கான ஸ்டிராவோ கூடப் பெற முடியாத சூழலில் உயிரிழந்தார். இதேபோன்ற கொடுமைகள் தமிழ்நாட்டுச் சிறையில் வாடும் சிறுபான்மையினருக்கு நேர்ந்தால், இந்த ஆணையத்தின் உதவியைக் கோர முடியுமா?

சிறுபான்மையினர் என்கிற காரணத்திற்கான யாருடைய உரிமைகள் எல்லாம் மறுக்கப்படுகிறதோ, பாதிக்கப்படுகிறதோ அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். நீதிமன்றத்திலே இருக்கிற வழக்குகள் சம்பந்தமாக ஆணையம் ஒன்றும் செய்ய முடியாது. அது நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும். அதே நேரத்தில் அவர்களுக்குத் தகுந்த சட்ட உதவி கிடைப்பதற்காக மாநில அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம்.

சிறுபான்மையினருக்குப் பொருளாதார ரீதியாக உதவுவதற்கோ, அது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதற்கோ இந்த ஆணையத்துக்கு உரிமை உண்டா?

சிறுபான்மையினருக்குப் பொருளாதார ரீதியாக உதவுவதற்கு தனியாக ஒரு நிதிக்கழகம் (ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) இருக்கிறது. அது சிறுபான்மை நலத்துறையின் கீழ்தான் செயல்படுகிறது. அதனுடைய செயல்பாட்டை இந்த ஆணையம் கண்காணிக்கும்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து தந்தை பெரியார் வெளியேறியதைத் தொடர்ந்து உருவானதுதான் திராவிட இயக்கங்கள். இந்துத்துவ சனாதனக் கட்சியான பாஜகவின் எழுச்சி, காங்கிரஸ், திமுக இரு இயக்கங்களையும் கொள்கை அடிப்படையில் மீண்டும் நெருக்கமான உறவுக்குக் கொண்டு சென்றதன் விளைவாகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், திமுக அரசில் சிறுபான்மையினர் நல ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லலாமா? அல்லது திமுக தலைவர்களுடன் பீட்டர் அல்போன்ஸ் கொண்டிருக்கிற நெருக்கமான உறவுக்குக் கிடைத்த பரிசு இந்தப் பதவியா?

நம்முடைய முதல்வர் என்னை 30 ஆண்டுகளாக அறிவார். அவர் என்னுடைய பணித்தளம், முன்னெடுப்புகள், கொள்கை ரீதியாக எனக்கிருக்கிற ஈர்ப்பு, நான் பணி செய்ய ஆசைப்படுகிற இடங்கள் இவையெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அதை எல்லாம் தெரிந்தவர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். இதை நான் எந்தவிதமான அரசியல் சார்பின்றி முழுமையாக நிறைவேற்ற ஆசைப்படுகிறேன். முழு நேரமாக சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கும், நல்வாழ்வுக்கும் உழைக்கவும் முதல்வரின் நல்லெண்ணத் தூதராக சிறுபான்மை மக்களைச் சென்றடையவும் ஆசைப்படுகிறேன்.

கருணாநிதியின் அன்பைப் பெற்ற நீங்கள், அதே அளவுக்கான மரியாதையை ஸ்டாலினிடமும் பெற்றிருக்கிறீர்கள். இருவரையும் ஒப்பிடலாமா?

கலைஞரின் நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும்தான் நான் இன்றைய முதல்வரைப் பார்க்கிறேன். அவர் விட்டுச் சென்றதையெல்லாம் இவர் தொட்டுத் தொடர்கிறார். அவர் காட்டிய பாதையில் இவர் அடி பிறழாமல் நடக்கிறார். அவரில் இவரைத்தான் பார்க்கிறேன்.

இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x