Published : 07 Jul 2021 05:35 PM
Last Updated : 07 Jul 2021 05:35 PM
முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் தண்ணீர்த் திருடப்படுவதால் மின்சாரத் துறைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பயனடையும் ஆயக்கட்டு விவசாயிகளைப் பாதிக்கும் தண்ணீர்த் திருட்டுப் பிரச்சினை தொடர்பாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குழாய் வழியாக மதுரைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர், தேனி ஆட்சியர் முரளிதரன், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய நீர் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பகுதிக்கு முறைப்படி வழங்கப்படவேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகளுக்கு இதில் உரிமை உண்டு. அதில் குறிப்பாகக் கம்பம் பள்ளத்தாக்கு, மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டு போகத்திற்கு உரிமை உண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் சரியான நேரத்தில் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போக பாசனத்தை உருவாக்குகிற வகையில் முதல் போக பாசனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் தண்ணீர்த் திருட்டைத் தொழிலாகக் கொண்டு கனரக மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை முறைகேடாக எடுக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தொடரந்து தண்ணீர்த் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தண்ணீர்த் திருட்டு நிறுத்தப்பட்டதால் வைகை அணைக்கு 160 எம்எல்டி கூடுதல் தண்ணீர் கிடைத்தது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு மீண்டும் திருட்டு தொடர்ந்தது. ஆனால், பல துறைகளில் புகார் செய்தும், வழக்குகள் தொடர்ந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தற்போது தண்ணீர்த் திருட்டைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையிலே இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பெரியாறு பாசன ஆயக்கட்டுப் பகுதிகளில் 527 இடங்களில் தண்ணீர்த் திருட்டு நடக்கிறது. அதிவேக மின் மோட்டார்கள் வைத்துத் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் மின்சாரத் துறைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர்த் திருட்டு தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் முழுமையான விசாரணை நடத்தப்படும். தண்ணீர்த் திருட்டு என்பது சமுதாய துரோகம். 10 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது. தண்ணீர்த் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர்த் திருட்டு தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன்.
ரூ.1,295 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும் திட்டம் 2023-ம் ஆண்டில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். கரோனா 2-ம் அலையால் இந்தத் திட்டம் காலதாதமம் ஆனது. முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே முல்லைப் பெரியாறு தண்ணீர்த் திருட்டு தொடர்பான முழு விவரங்கள் தெரியவரும். அதன் பிறகு மின்சாரத் திருட்டு, தண்ணீர்த் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT