Published : 07 Jul 2021 05:16 PM
Last Updated : 07 Jul 2021 05:16 PM
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பிரிவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
2014ஆம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப் பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்றபின், தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.
அந்த சமயத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது.
கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்குத் தேவையான நிதியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை, 2019இல் முந்தைய ஆட்சியாளர்கள் தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த தமிழக முதல்வர், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட ஏதுவாக, தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
கருணாநிதியின் வழியில் செயல்பட்டு வரும் இவ்வரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும் நல்வாய்ப்புக்கு உதவிடும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலக அளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT