Last Updated : 07 Jul, 2021 04:56 PM

 

Published : 07 Jul 2021 04:56 PM
Last Updated : 07 Jul 2021 04:56 PM

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேர்; ஒருவரை இழந்தோர் 3,593 பேர்: குழந்தைகள் ஆணையம் தகவல்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி. | படம்: ஜி.ஞானவேல்முருகன்.

திருச்சி

தமிழ்நாட்டில் இதுவரை 3,686 குழந்தைகள் கரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

குழந்தைகளுடன் தொடர்புடைய அரசின் 20 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகரக் காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் (சட்டம்- ஒழுங்கு), மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டம் தொடர்பாக ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி, குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குழந்தைகளுடன் தொடர்புடைய அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனும் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம்.

கரோனா பேரிடர்க் காலத்தில் இதுவரை 20 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் இல்லங்களை இந்த ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அனுமதியின்றிச் செயல்படும் குழந்தைக் காப்பகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், குழந்தைத் திருமணம் தொடர்பாகப் பெற்றோர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் பயின்று வரும் நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் தாய்- தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகள் 93 பேர் மற்றும் இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 3,593 பேர் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, சமூக நலத் துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x