Published : 07 Jul 2021 03:11 PM
Last Updated : 07 Jul 2021 03:11 PM
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வானூர் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூர் பகுதியில் நேற்று (ஜூலை 06) மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசுகையில், "பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. பொதுவாகவே, கடந்த 10 ஆண்டுகாலமாக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுசென்ற காரணத்தினால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள்.
ஆனால், கணக்கு சரியில்லை. கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதுபோன்று இல்லை என்றிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சியில் வந்திருக்காது. அப்படியே தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் வைத்திருக்க முடியும்.
ஆகவே, இதில் நம்முடைய குறையும் இருக்கிறது. ஏதோ அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள், மக்கள் அவர்களுக்கு அமோகமாக ஆதரவு தந்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்" எனப் பேசினார்.
சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு பாஜக நிர்வாகிகள் கே.டி.ராகவன், குஷ்பு, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் தோல்விக்கு அதிமுக காரணம் எனக் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழகத்தின் நலன் கருதியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்'. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. pic.twitter.com/R1lRtK822e
— O Panneerselvam (@OfficeOfOPS) July 7, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT