Published : 06 Jul 2021 07:51 PM
Last Updated : 06 Jul 2021 07:51 PM
இதுவரை 120 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு துறைத் தலைவர் பேராசிரியர் சுமதி கூறியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்து, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று முதல் பிரசவம் முடிந்த தாய்மார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த வாரம் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறைத் தலைவர் பேராசிரியர் சுமதி கூறியதாவது:
''புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் வழக்கமான சிகிச்சைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கடந்த வாரம் முதலே சீமாங் கட்டிடத்தில் உள்ள மகப்பேறு துறை சிகிச்சைப் பிரிவில் உள்ள 3-வது மாடியில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 120 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரசவம் முடிந்த தாய்மார்களுக்கு 4-வது மாடியில் நேற்று முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கரோனா வந்த கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், மருத்துவர்கள் ஆலோசனை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தற்போது கர்ப்பிணிப் பெண்கள், தடுப்பூசி போடத் தயங்குவதால் அவர்கள் அச்சத்தைப் போக்க தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களை வைத்து தினமும் விழிப்புணர்வு செய்கிறோம்.
இன்று ஒரே நாளில் 12 பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், பிரசவம் முடிந்த தாய்மார்கள் அச்சம், தயக்கமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்”.
இவ்வாறு சுமதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT