Published : 06 Jul 2021 06:35 PM
Last Updated : 06 Jul 2021 06:35 PM

தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்

சென்னை

“தொழிலாளர் நலத் துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் நலவாரியம் மற்றும் 18 அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, பாடநூல் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை, ஓய்வில்லங்கள், தொழிலாளர் நல மையம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்க வேண்டும்” என அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்குச் சொந்தமான மாமல்லபுரத்தில் உள்ள 'ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம்' மற்றும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்கிப் பயன்பெற்றுவரும் 'ஜீவா இல்லம்' ஆகியவற்றில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இன்று (06.07.2021) ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்குக் கூடத்தில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் இன்று( 06.07.2021) நடைபெற்றது. தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட கீழ்க்கண்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அமைச்சர் வழங்கினார்.

* குறைந்தபட்ச ஊதியச் சட்டம், வேலையாள் இழப்பீடு சட்டம், பணிக்கொடை பட்டுவாடா சட்டம் மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

* தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் நல வாரியம் மற்றும் 18 அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, பாடநூல் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை, ஓய்வில்லங்கள், தொழிலாளர் நல மையம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாகச் சென்று சேர உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் நிலுவையிலுள்ள அனைத்துப் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களின் மீதான நடவடிக்கையை விரைந்து முடித்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

இத்திறனாய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலர் கிர்லோஷ்குமார், கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்), கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்), கூடுதல் தொழிலாளர் ஆணையர் (ஆய்வுகள்), கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x