Published : 06 Jul 2021 04:13 PM
Last Updated : 06 Jul 2021 04:13 PM
காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 06) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கருணாநிதியால் 2010-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைத்தல் - அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூ.1,702 கோடி மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தைத் தமிழகத்தில் விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டிடங்களை மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்த விவரங்களைத் துறையின் செயலாளர் ஆர்.லால்வேனா மற்றும் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தெரிவித்தனர்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT