Published : 06 Jul 2021 03:30 PM
Last Updated : 06 Jul 2021 03:30 PM
உயர் கல்வி வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் தொடங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புகள் உள்ளதாகவும், 10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளதாகவும், 130 கோடி மக்கள்தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளதாகவும், இது 2017-ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், இதனால் அனைத்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியைப் பெற்றிருக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனால், உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கொள்கையை அமல்படுத்தி, அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் எனவும், வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஜூலை 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT