Published : 06 Jul 2021 12:28 PM
Last Updated : 06 Jul 2021 12:28 PM
தமிழகத்தில் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் தரவுகளைப் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துங்கள் என பிரதமர் கேட்டுக்கொண்டதாக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி அளித்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசிகள் போடப் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் 13% வரை வீணாகின. இந்தியாவிலேயே தடுப்பூசியை அதிகம் வீணடித்த மாநிலமாகத் தமிழகம் இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது அலை ஏற்பட்ட காலகட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்பும் அதிகரித்தது. இதனால் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. இதனால் வீணடிப்பது குறைந்தது. மிகவும் குறைக்கப்பட்டு 1% கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பாஜக தலைவர் முருகன் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் குறித்துப் பேசும்போது எவ்வளவு போடப்பட்டுள்ளன, எவ்வளவு இருப்பு, மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டவை எவ்வளவு, வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்தபின் எல்.முருகன் அளித்த பேட்டியில், தடுப்பூசி குறித்து பிரதமரிடம் பேசியதாகவும், தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் குறித்து தரவுகள் உள்ளதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் வீணாவதின் தரவுகளை வைத்துப் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துங்கள் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து தடுப்பூசிகள் குறித்த தரவுகளைக் கூறிவருகிறார். மத்திய அரசு அளிக்கும் தடுப்பூசிகள் குறித்தும், போடப்படுவது குறித்தும் தகவல் தெரிவித்து வருகிறார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டியில் எல்.முருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அவரது பேட்டி:
“தமிழகத்தைப் பொறுத்தவரை எவ்வளவு தடுப்பூசிகள் வருகின்றனவோ தடுப்பூசிகள் வரவர மக்கள் தொகைக்கு ஏற்ப, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்பப் பிரித்து அனுப்பப்படுகின்றன. நேரடியாகக் கொள்முதல் செய்ய உலகளாவிய கொள்முதல் செய்ய முதல்வர் ஒப்பந்தப் புள்ளி கோரினார். அதன்பின் மத்திய அரசு 75% கொள்முதல் செய்து அனுப்புவோம். 25% தனியார் கொள்முதல் செய்யும் என்று அறிவித்தது.
அதற்கு முதல்வர் தரப்பில் 25% தனியார் கொள்முதல் செய்தால் அவை பயன்படுத்தப்படாமல் வீணாகின்றன. 10% வரைதான் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மத்திய அரசு 90% கொள்முதலும், தனியாருக்கு 10% கொள்முதல் செய்யும் வகையில் மாற்றம் செய்ய பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
1,57,76,550 தடுப்பூசிகள் வந்திருந்தாலும் நேற்றைக்கும் நேற்றைய முன்தினமும் ஒரு அரசியல் கட்சித் தலைவர் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். எவ்வளவு வந்தன, எவ்வளவு போட்டீர்கள், எவ்வளவு மிச்சம், எவ்வளவு வீணாகின என்று தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாங்களும் அவருக்குத் தொடர்ச்சியாக பதிலளித்து வருகிறோம்.
வந்தவை 1,57,76,550. நேற்று வரை செலுத்தியவை 1,58.68,600. இப்போது கையிருப்பில் இருப்பவை 63,460. நீங்கள் கேள்வி கேட்கலாம் வந்தது 1.57 கோடி. ஆனால் போடப்பட்டது 1.58 கோடி எப்படி? கூடுதலாக எப்படிச் செலுத்தியுள்ளீர்கள் என்று கேட்கலாம்.
தடுப்பூசிகளைப் பொறுத்தவரை போடப்பட்ட நாள் ஜனவரி 16 அன்றிலிருந்து திமுக ஆட்சிக்கு வரும் வரை அவர்கள் போட்ட தடுப்பூசியில் 3.5 முதல் 4 லட்சம் வரை வீணாகிவிட்டதாக ஆர்டிஐயில் தகவல் பெறப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசியை வீணடித்துவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டும் அப்போது வந்தது.
தமிழகத்துக்கு திமுக ஆட்சிக்கு வந்தபின் வீணானதாகச் சொல்லப்பட்ட 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்துக் கூடுதலாக 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில் செலுத்தியுள்ளோம். அப்படியானால் போடுகிற அளவைக் குறைத்துப் போட்டீர்களா என்றால் இல்லை. கூடுதலாக 16% முதல் 24% வரை கூடுதலாக அடைக்கப்படும் மருந்தையும் வீணடிக்காமல் பயன்படுத்தியதால் போடப்பட்டது. 10 பேர் போடும் இடத்தில் 11 பேருக்குப் போடுவது என்கிற அளவில் போடப்பட்டது.
அதனால் வந்த தடுப்பூசிகளை விட மிக சாமர்த்தியமாக கூடுதலாகத் தடுப்பூசிகளைப் போட்டுள்ளோம். இது செய்தியாளர்களுக்காக அளிக்கப்பட்ட பதில் அல்ல, கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அந்த அரசியல் கட்சித் தலைவருக்கான பதில்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 6 Comments )
பா ஜா கா ஆளும் மாநிலங்களில் எவ்வளவு தடுப்பூசி கொடுக்கப்பட்டது ,எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டது , எத்தனை சதவிகிதம் வீணாக்கப்பட்டது , எத்தனை உயிர் இழப்பு என்று இதுவரை தெரிவிக்கப்பட்டதா ? வெள்ளை அறிக்கையை முதலில் வெளியிடவும்
0
0
Reply
தூக்கத்தில் பேசுபவர்களுக்கு எல்லாம் அமைச்சர் பத்தி சொல்ல வேண்டியதில்லை.
9
2
Reply