Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

கோவையில் 56 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள். படம்: இரா.கார்த்திகேயன்

கோவை/திருப்பூர்

கோவை மாவட்டத்தில் 56 நாட்களுக்குப் பிறகு, நேற்று டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மதுப் பிரியர்கள் உற்சாகத்தில் தேங்காய் உடைத்து, பட்டாசு வெடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கோவை மாவட்டத்தில் 290-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், 56 நாட்களுக்குப் பிறகு, கோவை மாவட்டத்தில் நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, வாடிக்கையாளர்கள் மது பாட்டில்களை வாங்குவதற்காக, கடைகளின் முன்பு வட்ட வடிவில் குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில், காலை 10 மணிக்கு வந்தவாடிக்கையாளர்கள் மது பாட்டில்களை வாங்கியவுடன் சாட்டை உள்ளிட்ட சிறிய ரக பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். நியூ சித்தாபுதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டிலை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிலர், தரையில் வைத்து, தேங்காய் சுற்றி, கற்பூரம் பற்ற வைத்து எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக, டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மது விற்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில், டோக்கன் முறை, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. ஏராளமானோர் மது வாங்க கூடினர்.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. திருப்பூர் எம்.எஸ்.நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்தவர், வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட் டத்தில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x