Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM

மலையோரப்பகுதிகளில் மட்டும் மழை: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில், மலைப்பகுதிகளில் மட்டும் அவ்வப்போது பெய்யும் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.

நாகர்கோவில்/ திருநெல்வேலி/தென்காசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்வதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இம்மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ள நிலையில், மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் அதிகபட்சமாக நேற்று63 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.சிற்றாறு ஒன்றில் 13 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. புத்தனாறு, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது.

பேச்சிப்பாறை அணையில் 45.20 அடி தண்ணீர் உள்ள நிலையில்,அணைக்கு விநாடிக்கு 934 கனஅடிதண்ணீர் வந்தது. அணையில் இருந்து 711 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.32 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 425 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றில் 16.89 அடியும், சிற்றாறு இரண்டில் 16.99 அடியும், மாம்பழத்துறையாறில் 54.12 அடியும், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் 22 அடியும் தண்ணீர் உள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதாலும், மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதேநேரம் சுற்றுலா மையங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், திற்பரப்பு வெறிச்சோடி காணப்படுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நேற்று காலை நிலவரப்படி 36.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 6, சேர்வலாறு- 35, மணிமுத்தாறு- 1.4, அம்பாசமுத்திரம்- 29, திருநெல்வேலி 5.6.

மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 122.35 அ்டி (143), சேர்வலாறு- 113.88 அடி (156), மணிமுத்தாறு- 77.85 அடி (118), வடக்கு பச்சையாறு- 14.70 அடி (50), நம்பியாறு- 11.93 அடி (22.96), கொடுமுடியாறு- 28.75 அடி (52.25).

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைபெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 21 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 13 மி.மீ., ராமநதி அணையில் 12, தென்காசியில் 5.40, குண்டாறு அணையில் 2, சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணையில் நீர்மட்டம் 71.30 அடியாகவும், ராமநதி அணையில் நீர்மட்டம் 59.50 அடியாகவும், கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 63.98 அடியாகவும், அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 114 அடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x