Published : 05 Feb 2016 06:09 PM
Last Updated : 05 Feb 2016 06:09 PM
கேரள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதன் எதிரொலியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பெண்கள் அதிக ஆர்வம் காட்டி விருப்ப மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலும், கேரளத்திலும் சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு கொடுக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இதனையடுத்து பல ஆயிரம் பேர் விருப்பமனுக்களை கொடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் அதிமுகவினர் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் பெய ரளவுக்கு விருப்பமனுக்கள் கொடுத்திருந்தனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. இதனால் உற்சாகமடைந்த அதிமுக நிர் வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர்.
தற்போது இடுக்கி மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவினர் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக பீர்மேடு, தேவிகுளம், உடும்பன்சோலை ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்றுமுன்தினம் வரை பீர்மேடு 13, தேவிகுளம் 19, உடும்பன்சோலை 26 என மொத்தம் 58 பேர் விருப்பமனுக்களை கொடுத்துள்ளனர். இதில் பெண்கள் மட்டும் 36 பேர் மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் இடுக்கி மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியது: ஊழல் புகார்களில் சிக்கியுள்ள கேரள மாநில ஆளும் காங்கிரஸ் கூட்டணியினர் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இடதுசாரிகளின் கோட்டை என்று அழைக்கப்பட்ட உடும்பன்சோலையிலும், முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பீர்மேடு தொகுதியிலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வென்றுள்ளது. இதனால் கேரளத்தில் வசிக்கும் தமிழக தொழிலாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT