Published : 05 Jul 2021 06:32 PM
Last Updated : 05 Jul 2021 06:32 PM
சசிகலாவிடம் பேசும் அதிமுகவினரை நீக்க வேண்டும் எனப் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ, பி.கே.வைரமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆலோசனையில் செயல்படுவது, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன் என்று சசிகலா அறிவித்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினர்கூட இல்லாத சசிகலாவிடம் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் பேசி, கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் அதிமுகவினரைக் கட்சியில் இருந்து நீக்குவது, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT