Published : 05 Jul 2021 03:39 PM
Last Updated : 05 Jul 2021 03:39 PM
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து கரூரில் தேமுதிக சார்பில் விறகு அடுப்பில் சமைத்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின.
தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்தது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பே பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐக் கடந்தது.
பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சைக்கிளில் பேரணியாகச் சென்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து கரூர் மாவட்டத் தேமுதிக சார்பில் சார்பில் மகளிர் அணிச் செயலாளர் மாலதி வினோத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 5-ம் தேதி) நடைபெற்றது.
முன்னதாக மாவட்டப் பொறுப்பாளர் கஸ்தூரி என்.தங்கராஜ் வரவேற்றார். காஸ் விலை உயர்வைக் கண்டித்து தலையில் காஸ் சிலிண்டர், விறகுகளைச் சுமந்தபடியும், விறகு அடுப்பில் பெண்கள் சமைப்பது போலவும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக நிர்வாகிகள், கட்சியினர், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT