Published : 05 Jul 2021 03:18 PM
Last Updated : 05 Jul 2021 03:18 PM
பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசுக்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று (ஜூலை 05) காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார். அதன் சிறப்பம்சங்கள்:
"கரோனா ஈகியர் நினைவுக் கோட்டம்
1. கரோனாவுக்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னைப் புறநகரில் 10 ஏக்கர் பரப்பளவில் நினைவுக் கோட்டம் அமைக்கப்படும்.
2. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி.
3. செங்கல்பட்டு தடுப்பூசி வாளகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். அங்கு கரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்.
புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
4. தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
1. அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
3. சென்னை பல்கலைக்கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
4. தமிழகத்தில் 5 இடங்களில் ஐஐடி-க்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.
5. ஐந்து புதிய சட்டக் கல்லூரிகள், 5 புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தமிழகத்தை உயர்கல்வி மையமாக்குதல்
5. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தை உயர்கல்வி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
6. தமிழகத்தை உயர்கல்வி மையமாக்க இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தவிர, புதிய திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
மது விலக்கு
7. தமிழகத்தில் ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு
8. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்படும்.
9. தமிழகத்திற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்த முதல்வர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழு அமைக்கப்படும்.
மின் கட்டணம் குறைப்பு
10. தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.
புதிய மின் திட்டங்கள்
11. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
12. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
13. மின்வாரியத்தை லாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
14 ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.
கீழடி அருங்காட்சியகம் விரிவாக்கம்
15. கீழடியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் விரிவாக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.13 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக அதிகரிக்கப்படும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT