Published : 05 Jul 2021 02:32 PM
Last Updated : 05 Jul 2021 02:32 PM
ஒருவழியாக ஊரடங்கில் ஒரே மாதிரியான தளர்வுகள் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் தொடர் ஊரடங்கு மூலம் ஒவ்வொரு தொழிலுக்கும் துறைக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட, நஷ்டங்கள். இதில் வித்தியாசமான நஷ்டங்களைச் சந்தித்த துறைகள் ஏராளமாய் இருந்தாலும், ஆப்செட் அச்சகத்தினருக்கான பாதிப்பு மிகவும் வித்தியாசமானது.
அதாவது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்ததாக புதிய அரசு பதவியேற்றவுடன் இன்னமும் கடுமையாக்கப்பட்டது. இந்த நேரத்தில் பொதுவாக தேர்தலில் வென்றவர்கள் மட்டுமல்ல, தோற்றவர்களும் கூட தனக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி போஸ்டர்கள் அச்சடிப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு தொகுதிக்கு வென்ற வேட்பாளர் மட்டும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடிப்பது உண்டு. தவிர அவரின் ஆதரவாளர்கள், விசுவாசிகள் ஆளுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடித்து தெருக்களில் ஒட்டி ஊரையே கலங்கடித்து விடுவார்கள்.
இவை தவிர எதிர்க்கட்சி வேட்பாளர்களும் குறைந்தபட்சம் 5 ஆயிரம், 10 ஆயிரம் போஸ்டர்கள் தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து அச்சடித்து ஒட்டுவார்கள். இந்த வகையில் மட்டும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அவரவர்க்குத் தெரிந்த ஆப்செட் அச்சகங்களில் பல்லாயிரக்கணக்கில் போஸ்டர்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்துள்ளார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடனே அதை எல்லாவற்றையும் கேன்சல் செய்து விட்டார்கள். இந்த வகையில் மட்டும் தமிழகம் முழுக்க 234 தொகுதிகளில், தொகுதிக்கு 1 லட்சம் போஸ்டர்கள் எனக் கணக்கிட்டால் 2,34,00,000 போஸ்டர்கள் அச்சடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார்கள் அச்சக உரிமையாளர்கள்.
இந்த போஸ்டர்கள் குறைந்தபட்சம் 2 அடிக்கு 3 அடியில் 4 சீட்டுகள் கொண்டதாக இருக்கும். இதில் மட்டும் இழப்பு பல கோடி என்கிறார்கள். அது மட்டுமா? ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற நிலையில் அதை வாழ்த்திப் பல லட்சம் போஸ்டர்கள் களம் இறக்கியிருப்பார்கள் கட்சிக்காரர்கள். அதுவும் போச்சு. அடுத்ததாக கலைஞர் பிறந்த நாள். திமுக ஆளுங்கட்சியாக அமர்ந்திருப்பதால், அதுவும் ஸ்டாலின் முதன்முறை முதல்வர் என்பதால் வரலாறு காணாத அளவு போஸ்டர்கள் களம் இறங்கியிருக்கும். அதுவும் போச்சு. அடுத்தது ரேஷன் கார்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டது; அத்துடன் கரோனா நிவாரண உதவியாக 14 பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கெல்லாம் தனித்தனியாக போஸ்டர் களம் இறங்கியிருப்பார்கள் கட்சியினர். ‘அது எல்லாம் சுத்தமாக போயே போச்சு!’ என்கிறார் கோவையில் லித்தோ பிரஸ் உரிமையாளர் அபு.
இதுகுறித்து அபு கூறுகையில், ‘‘பொதுவாகத் தேர்தல் காலங்கள்தான் லித்தோ- ஆப்செட் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கு தீபாவளியாக இருக்கும். அதுவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 பேர் வெற்றி பெறுவதால், அதே அளவு வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பெறுவதால் இவர்களுக்காகக் களம் இறக்கப்படும் போஸ்டர்கள் கணக்கே இருக்காது. எனவே அதை வைத்துத்தான் இந்த அச்சகங்களே இயங்கி வந்தன. அது இந்த முறை ஊரடங்கு காரணமாய் சுத்தமாகவே பாழாகிவிட்டது. கோவையில் மட்டும் 3 பெரிய ஆப்செட் பிரிண்ட் அச்சகங்கள் உள்ளன. அதில் எங்களுக்கு மட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலிருந்து 50 வகையான நன்றி அறிவிப்பு போஸ்டர்கள் வந்துவிடும். அவை மொத்தமாகப் பார்த்தால் பல லட்சங்கள் இருக்கும்.
இதைத் தவிர திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டத்திலிருந்தெல்லாம் வரும். அப்படி இந்த ஆண்டு வந்த போஸ்டர் ஆர்டர்கள் எல்லாம் வந்த வேகத்தில் கேன்சல் ஆகிவிட்டன. கோவையில்தான் 3 பிரஸ்கள். அதிக ஆப்செட் அச்சகங்கள் இருப்பது சென்னையில்தான். அங்கே எப்படியும் 200 அச்சகங்களுக்கு குறையாமல் இருக்கும். அடுத்ததாக சிவகாசி. அங்கே 150 அச்சகங்களாவது இருக்கும். அடுத்தது சின்னதும் பெரியதுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அச்சகங்கள் உள்ளன.
எங்கள் மாவட்டத்திலேயே எங்களிடம் அச்சடிக்க வரும் போஸ்டர்களுக்கு இணையாக இங்குள்ளவர்கள் சிவகாசி, சென்னைக்கு சென்றும் பல்க் (10 ஆயிரத்திற்கும் மேல் வரும் போஸ்டர்கள்) ஆர்டர்கள் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் உண்டு. அது எல்லாம் இந்த முறை சுத்தமாக அவுட். அடுத்தது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம். கரோனா மூன்றாம் அலை பற்றி வேறு பேச்சு இப்போதே பயமுறுத்துகிறது. ஏற்கெனவே பல ஆப்செட் அச்சகங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து பூட்டப்படக்கூடிய நிலையில் உள்ளன. இப்படியே போஸ்டர்கள் அச்சடிக்கும் நிலை தொடர்ந்தால் இருக்கிற அச்சகங்களையும் பூட்டி விட வேண்டியதுதான்!’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT