Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிப் போடும் பணியை நேற்று கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர் லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிப் போடும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை, திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர் லால், வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி, மாவட்ட தாய் - சேய் நல அலுவலர் தேவிஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 5,17,807 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக நரிக்குறவர் இன மக்கள், பழங்குடியின மக்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2,017 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியில் மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு படிப்படியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x