Last Updated : 04 Jul, 2021 05:17 PM

 

Published : 04 Jul 2021 05:17 PM
Last Updated : 04 Jul 2021 05:17 PM

58 ஆண்டுகளில் புதுச்சேரியில் இரு பெண் அமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கான வாய்ப்பும், தேர்வாகும் பெண்களும் குறைவுதான். அதையும் தாண்டி 58 ஆண்டுகளில் இரு பெண்கள் மட்டுமே அமைச்சர்களாகியுள்ளனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை முக்கியக் கட்சிகள் தரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர்களுக்குக் குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்து வந்தன. முதல் சட்டப்பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969- 74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப்பேரவைக்குப் பெண்கள் யாரும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11-வது சட்டப்பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, திமுக சார்பில் 1, பாஜக, பாமக, ஐஜேக என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன் உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின் பெண் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை மாறி முதன்முதலாக 4 பெண்கள் வெற்றி பெற்றனர்.

இம்முறை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட முக்கியக் கட்சிகள் வாய்ப்பே தரவில்லை. அதிமுக, திமுக, பாஜகவில் பெண் வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லை. காங்கிரஸில் ஒரேயொரு பெண் வேட்பாளராக, கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த விஜயவேணிக்கு வாய்ப்பு தரப்பட்டது. எனினும் அவர் தோல்வியடைந்தார். என்.ஆர்.காங்கிரஸில் கடந்த முறை வென்ற சந்திர பிரியங்கா போட்டியிட வாய்ப்பு கிடைத்து வென்றார். இம்முறை வென்ற ஒரேயொரு பெண் எம்எல்ஏவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்துச் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை. பெரிய கட்சிகளே வாய்ப்பு தரத் தயங்குகின்றன. அந்நிலை மாற வேண்டும். வாக்காளர்கள் அதிகமிருந்தும் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராதது தவறு. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரை 2 முறை மட்டுமே நடந்துள்ளது.

38 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவராக டாக்டர் ஸ்ரீதேவி பதவி வகித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் நடக்க உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவது அவசியம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x