Published : 04 Jul 2021 12:13 PM
Last Updated : 04 Jul 2021 12:13 PM

மாநகராட்சியாகிறது கரூர்; உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

கரூர் நகராட்சி | படம்: க.ராதாகிருஷ்ணன்

கரூர்

கரூர் நகராட்சி விரைவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மாநகராட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று. கடந்த 1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது. மக்கள்தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969-ல் முதல் நிலை, 1983-ல் தேர்வுநிலை, 1988-ல் சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர்.

30,000க்கும் அதிக மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகள் கடந்த 2004-ம் ஆண்டு நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, கரூர் நகராட்சியை ஒட்டியிருந்த இனாம்கரூர், தாந்தோணி பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. அப்போதிலிருந்தே கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

அதன்பிறகு கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என இரண்டு, மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு பரப்பளவு 6.03 ச.கி.மீட்டரில் இருந்து 53.26 ச.கி.மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. மக்கள்தொகை 2.14 லட்சமாக உயர்ந்தது.

இதையடுத்துக் கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு கரூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி பங்கேற்றபோது மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடந்த முடிந்த தேர்தலில் போட்டியிட்ட மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது வாக்குறுதியில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகும் எனவும், கரூரில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில் கரூர் நகராட்சி 1-வது வார்டு கோதூர் சாலையில் இன்று (ஜூலை 4-ம் தேதி) நடந்த மக்கள் சபைக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசும்போது, முதல்வரிடம் கூறி நிகழாண்டிலேயே கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மாநகராட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பது உறுதியாகியுள்ளது. கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு 146 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து 147-ம் ஆண்டு நடந்து வருகிறது. நகராட்சியின் 150-ம் ஆண்டு நெருங்கி வருகிறது. கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளின் தற்போதைய தோராய மக்கள்தொகை 2.40 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கரூர் நகராட்சி ஆணையர் கே.எம்.சுதாவிடம் கேட்டபோது, ''கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x