Published : 22 Feb 2016 03:46 PM
Last Updated : 22 Feb 2016 03:46 PM
காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் கிள்ளியூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவை மட்டுமே போட்டியாக கருதும் அவர்களுக்கு கிள்ளியூர் தொகுதியின் தேர்தல் வரலாறு மீண்டும் கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு என்று தனித்துவம் உண்டு. மாநிலத்தின் பிற பகுதிகளில் திராவிட கட்சிகளின் அலை அடித்த நேரங்களிலும் இங்கு காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளே அதிக வாக்குகளை பெற்றுள்ளன. குறிப்பாக குமரி மேற்கு மாவட்டத்தில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிவரும் பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இவற்றில் கிள்ளியூர் தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் பின்னணி உள்ள கட்சிகளே வெற்றிபெற்று வருகின்றன.
இதை கருத்தில்கொண்டு அக்கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், இன்னும் சீட் கிடைக்காத போதிலும் தேர்தல் களப் பணியை தொடங்கிவிட்டார். அவரின் ஆதரவாளர்கள், இத்தொகுதி முழுவதும் வாகனப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோகன் சாலமன் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியும் வாகன பிரச்சாரப் பயணம் செய்து வருகிறோம். கிள்ளியூர் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் அதிகமுள்ள பகுதியாகும்.
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸுக்கு பிரதான போட்டியாக பாஜகவை மட்டுமே கருதுகிறோம். காங்கிரஸ் வெற்றிபெற்ற போதெல்லாம் அடுத்த இடத்தில் அதிக வாக்குகளுடன் பாஜக இருந்துள்ளது. வரும் தேர்தலிலும் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார் அவர்.
தமாகாவும் தயார்
அதேநேரம் கடந்த இருமுறையும் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிபெற்ற ஜான்ஜேக்கப், தற்போது தமாகா குமரி மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார். கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தான் ஆற்றிய மக்கள் தொண்டால் மீண்டும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகிறார். இதற்கிடையே கிள்ளியூர் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த முறை மாற்றிக்காட்டுவோம் என்ற தீவிரத்துடன் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT