Published : 25 Feb 2016 10:39 AM
Last Updated : 25 Feb 2016 10:39 AM
பொதுத் தேர்வு, சட்டசபை தேர்தலின்போது மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக மின் பராமரிப்புப் பணிகளை இம்மாதத்துக்குள் முடிக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல், 10-ம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ல் நிறைவடைகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது.
பொதுவாக கோடைகாலம் தொடங்கியதும் மின்வெட்டு பிரச்சினை ஏற்படும். இந்த ஆண்டு கோடைகாலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த சமயத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டால் அது தேர்தல் பணிகளை பாதிக்கும். அத்துடன் அரசு பொதுத்தேர்வுகளும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, அனைத்து மின் பராமரிப்பு பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்குமாறு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்பகிர்மான கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது போதிய அளவு பருவமழை பெய்தது மற்றும் காற்றாலை மூலம் போதிய மின்சார உற்பத்தி ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. மேலும், அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும், ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே, அச்சமயத்தில் மின்வெட்டு, மின்தடை ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வு நடைபெறும் சமயத்தில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவதைத் தடுக்க அனைத்து மின் பராமரிப்பு பணிகளையும் இம்மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்த மின்னழுத் தம் போன்ற பிரச் சினைகள் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் மின்சாதனங்களை உரிய முறையில் பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மின்வாரிய தலைமை பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்துக்கும் நாளை (இன்று) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT