Published : 03 Jul 2021 02:33 PM
Last Updated : 03 Jul 2021 02:33 PM
கரூரில் புதிய ரோந்து வாகனங்களை எஸ்.பி. ப.சுந்தரவடிவேல் இன்று (ஜூலை 3) தொடங்கி வைத்தார். பொதுமக்கள் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் உடனடியாக உதவி செய்ய ரோந்து வாகனக் காவலர்கள் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் 17 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் குற்றத் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பணி, பொதுமக்கள் புகார் மீதான உடனடி நடவடிக்கை ஆகியவற்றுக்காக 17 காவல் நிலையங்களுக்குத் தலா இரு 2 சக்கர வாகனங்கள் வீதம் 34 ரோந்து வாகனங்கள் மற்றும் கரூர் நகரப் பகுதியில் ஒரு ஜீப், வேன் என இரு, நான்கு சக்கர ரோந்து வாகனங்களைக் காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 3-ம் தேதி) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்துக் காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவல் நிலையங்களுக்கு ஏற்கனவே தலா ஒரு ரோந்து வாகனம் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற முடியும். 4 சக்கர வாகனங்கள் திருகாம்புலியூரில் இருந்து வீரராக்கியம் வரையும், மற்றொன்று வெங்கக்கல்பட்டியிலிருந்து செம்மடை வரையும் ரோந்துப் பணியில் ஈடுபடும். அனைத்து வாகனங்களுக்கும் விளக்கு மற்றும் சைரன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் சேவைக்காகச் செயல்படும். ரோந்துப் பணியில் இருப்பவர்கள் பொதுமக்களின் அழைப்பிற்கு உடனடியாகச் சென்றும், குற்றங்கள் நடவாமல் கண்காணித்தும், சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்கள் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் உடனடியாக உதவி செய்ய ரோந்து வாகனக் காவலர்கள் தயாராக இருப்பார்கள்'' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.வி.கீதாஞ்சலி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் (ஆயுதப்படை) சி.அய்யர்சாமி, கோ.சீனிவாசன், செ.தேவராஜன், தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் ராஜசேர்வை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment