Last Updated : 03 Jul, 2021 02:14 PM

1  

Published : 03 Jul 2021 02:14 PM
Last Updated : 03 Jul 2021 02:14 PM

இழப்பீடு வழங்காமல் பணிகளைத் தொடரக் கூடாது: உயர் மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் 

உடுமலை

உரிய இழப்பீடு வழங்காமல் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளைத் தொடரக்கூடாது என வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களில் ஏறி உடுமலை விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை கோட்டத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பவர் கிரிட் நிறுவனம் சார்பில் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமம் முதல் கோவை மாவட்டம், இடையர்பாளையம் வரை 400 கிலோவாட் கொண்டு செல்லும் வகையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உடுமலை அடுத்த மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம் கிராமங்களில் 17 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தை திட்டப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்த விவசாயிகள் குடும்பத்துடன் திரண்டு வந்து, பணிகளை நிறுத்தக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து உயர் மின் கோபுரங்களில் ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சென்ற உடுமலை கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம், கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வெல்கேஷ் கூறும்போது, ’’மேற்படி பகுதியில் விவசாயிகள் நில அனுபவ உரிமைக்கான இழப்பீடு கேட்டுக் கோரிக்கை வைத்தபோது, அறநிலையத் துறையும் இழப்பீடு கோரி மனு கொடுத்துள்ளது. இழப்பீட்டை அறநிலையத் துறைக்குத்தான் கொடுப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி வட்டாட்சியரால் விவசாயிகளுக்குப் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறநிலையத் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். எனவே இழப்பீட்டு தொகையை உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தில் வைப்பீடு செய்துவிட்டு, திட்டப் பணிகளைத் தொடர வேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இக்கோரிக்கையை பவர்கிரிட் நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது.

அதனால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் உயர்மின் கோபுரத்தின் மேலே ஏறியும், கீழே பெண்கள் திரண்டு நின்றும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் 2 வார காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகை மாவட்ட நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படும் எனக் கோட்டாட்சியர் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் திடீர் போராட்டதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x